அதிமுகவுடன் கூட்டணியா? ஒரே போடாக போட்ட தனியரசு! எடப்பாடியையும் சந்திக்கலயாமே
சென்னை: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று காலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும், இதனால் அவர் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தற்போது தனியரசு விளக்கமாக கூறியுள்ளார்.
அதிமுகவுடன் இணைய உள்ளதாக பரவிய தகவலை மறுத்துள்ள தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை என அரசியல் கட்சிகள் அனல் பறக்க கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வரும் அதிமுக, மெகா கூட்டணியை அமைக்க வியூகம் வகுத்து வருகிறது.
எடப்பாடியை தனியரசு சந்தித்ததாக
வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி, செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வருகிறது. இந்த சூழலில்தான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று காலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
சமீப காலமாக தனது பேட்டிகளில் அதிமுகவை கடுமையாக தனியரசு விமர்சித்து வந்த நிலையில், இன்று திடீரென எடப்பாடியை சந்தித்ததாக பரவிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சசிகலா ஆதரவு நிலைப்பாடுடன் இருந்த தனியரசு 2 தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டார்.
தவறான தகவல் என விளக்கம்
ஜெயலலிதா ஆட்சியின் போது சட்டசபையில் அதிமுக அரசை வெகுவாகப் புகழ்ந்து பேசியவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அணியில் பயணித்த தனியரசு, அண்மைக் காலமாக தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்து பேசியதுடன் அறிவாலயத்துக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், தனியரசு எடப்பாடியை சந்தித்ததாக வெளியான தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைய தனியரசு முடிவு செய்துவிட்டதாக கூடச் செய்திகள் பரவின. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியதாகவும் தெரிவித்துள்ளார்.
பசுமை வழி சாலை வழியாக சென்ற போது
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் என்பதால் பசுமை வழிச்சாலையில்தான் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்களின் வீடுகள் அதே பகுதியில் உள்ளன. அமைச்சர்களை தனியரசு சந்திக்க சென்றதாக கூறினார்.
அமைச்சர்களை சந்திக்க தனியரசு பசுமை வழிச்சாலை வழியாக சென்றபோது எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக தகவல் பரவியதாக தெரிகிறது. தனியரசு "அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சக்கரபாணியை தான் பார்க்க சென்றதாகவும், அவர்களை பார்க்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன் என்பது தவறான தகவல்" என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications