‛நாமக்கல்லை வழங்கிய திமுக’.. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் புதுமுகத்துக்கு வாய்ப்பு? பரபர தகவல்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ள நிலையில் வரும் தேர்தலில் புது முகத்துக்கு வாய்ப்பளிக்கப்பட அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் திமுக வியூகம் வகுத்து வருகிறது. திமுகவுடன் ஏராளமான கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

தற்போது திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பங்கேற்றது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து கொங்குநாடு மக்கள் தேசி கட்சிக்கு மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ஏகேபி சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் நாமக்கல் தொகுதி அந்த கட்சிக்கே திமுக தலைமை வழங்கி உள்ளது.
இதுதொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இன்றைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது, ‛‛மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஈஸ்வரன், ‛‛ஆம், கடந்த ஆண்டை போலவே நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம்'' என்றார். இதையடுத்து வேட்பாளராக தற்போதைய எம்பியான ஏகேபி சின்ராஜ் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛கட்சி வேட்பாளர் யார் என்பதை செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்யும். இந்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார்.
அதன்பிறகு பத்திரிகையாளர் ஒருவர், ‛‛புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே கோரிக்கை வந்துள்ளதே'' என கேள்வி கேட்டார். அதற்கு ஈஸ்வரன், ‛‛எங்களின் எம்பி (ஏகேபி சின்ராஜ்) வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அப்போது அதற்கான வாய்ப்பு இருக்கத்தானே செய்யும். ஆனாலும் செயற்குழு தான் அந்த முடிவை எடுக்கும்'' என்றார். இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் புதுமுகம் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications