இது தான் கடைசி! அடுத்த சுதந்திர தினத்தன்று மோடி வீட்டில் தான் கொடியேற்றுவார்! கே.எஸ்.அழகிரி ஆருடம்!
சென்னை: அடுத்த சுதந்திர தினத்தன்று பிரதமராக தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றவர் மோடி என அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது என்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். பேசுவதற்கு முன்பு பா.ஜ.க.வின் ஊழலைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் எதிர்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.
கடந்த 9 ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்கிற மோடி அறிமுகப்படுத்திய உதான் திட்டம் தோல்வி, எச்.சி.எல். இன்ஜின் தயாரிப்பில் ரூபாய் 159 கோடி இழப்பு, பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடியில் கூடுதலாக ரூபாய் 154 கோடி பொதுமக்களிடம் வசூல், எல்லாவற்றுக்கும் மேலாக பாரத் மாலா திட்டத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.
பாரத்மாலா திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகளையும் - வெற்றிகரமான ஏலதாரர்கள் டெண்டர் நிபந்தனையை பூர்த்தி செய்யாதது, தவறான ஆவணங்களின் அடிப்படையில் ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் அல்லது தவறான டிபிஆர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் ரூ.3,598.52 அளவுக்கு நிதியை திருப்பிவிட்டது போன்றவற்றையும் சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டியுள்ளது.தமது நேரடி கண்காணிப்பில் நடந்த பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?
சுங்கச்சாவடி விதிகளை மீறியதை சிஏஜி கண்டறிந்துள்ளது. சீரற்ற முறையில் தணிக்கை செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகளில் பயணிகளிடமிருந்து ரூ.132.05 கோடியை தவறாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்துள்ளது. அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையின் திட்டங்களின் இரண்டு பிரிவுகளில் சலுகை ஒப்பந்தங்களில் வருவாய் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.133.36 கோடி வருவாயை இழந்தது. இந்த தணிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாகக் கருவூலத்திற்கும், பயணிகளுக்கும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?
தலைவர் ராகுல் காந்தி எடுத்த முயற்சியின் விளைவாக மகத்தான 'இந்தியா' கூட்டணி உருவாகியிருக்கிறது. இந்த கூட்டணியினுடைய கடும் முயற்சியின் காரணமாக தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள். அதற்கு மாறாக அவரது வீட்டிலேயே தேசியக் கொடி ஏற்றும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications