காங்கிரஸ் ஓட்டுக்களை விட்டுவிடாதீர்கள்... வாக்காளர் பட்டியலை சரிபாருங்கள் -கே.எஸ்.அழகிரி
சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டத் தலைவர்களும், பொறுப்பாளர்களும் சிறப்பு அக்கறையோடு கட்சி நிர்வாகிகளை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

2022 ஜனவரி 1-ம் தேதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான பணிகள், தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்களை நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் மனு அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜனவரி மாதம் 13, 14, 27, 28, ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதனடிப்படையில், வருகிற ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், மேலும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மாவட்டத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் 5.1.2022 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கண்ட அட்டவணைகளின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்நாட்களில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம, சர்க்கிள், வார்டு நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தங்களை முழுமையாக இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து, தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications