உ.பி. நிகழ்வை கண்டித்து... நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் விவகாரம்..!
சென்னை: உத்திரப்பிரதேச மாநில அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று பிரியங்கா காந்திக்கு எதிரான ஜனநாயக படுகொலையை கண்டித்து முழக்கம் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விவசாயிகள்
மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது, விவசாயிகள் பெருமளவில் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர்
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டி வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் பெரும் ஆத்திரமடைந்த விவசாயிகள் போராட முற்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமாக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஜனநாயக விரோதம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உ.பி. அரசின் காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கிற வகையிலும், இதில் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற அவரை தடுத்தது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

கண்டனம்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட பிரியங்கா காந்தி அவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவி அவரை தாக்க முற்பட்டுள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பிரியங்கா காந்தி அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

கொடூரம்
இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதை உணர்த்துகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் திரண்டெழுந்து எதிர்ப்பை தெரிவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் விரோதத்தை பெற்றுள்ள பா.ஜ.க. ஆட்சி, வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை எவராலும் தடுக்க முடியாது.

கட்சி மேலிடம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி அவர்களுக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நாளை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications