குமரேசன் மறைவு புகைப்பட இதழியல் உலகிற்கு பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: குமரேசனின் மறைவு புகைப்பட இதழியல் உலகிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு;
''மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு.குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன்.

திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் அவர்களின் பெயரனான குமரேசன் அவர்கள், விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த வாரம்தான் பூர்வீகக் குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூலுக்கு எனது வாழ்த்துச் செய்தியை பெற்றுச் சென்றார்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்று பக்கங்கள் பலவற்றை தனது புகைப்படக் கருவியின் வாயிலாகப் பதிவு செய்தவர். தலைவர் கலைஞர், நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பதிவு செய்தவர். குமரேசன் அவர்களது திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மூத்த புகைப்பட பத்திரிகையாளர் குமரேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான திரு.சு.குமரேசன் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் மறைவு புகைப்பட பத்திரிக்கை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தனித்துவமிக்க புகைப்படக் கலைஞராக திகழ்ந்த திரு.சு.குமரேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications