குன்றத்தூருக்கு காரில் ஆர்வமாக ஓடி வந்த விஏஓ.. பட்டாவில் பெயர் மாற்ற போனவருக்கு தலையெழுத்தே மாறியது
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த ரவிபாரதி என்பவர் சொந்தமான இடத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் என்பவர் 80 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சில அரசு அலுவலங்களில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பட்டா வாங்க, மின் இணைப்பு வாங்க, மின் இணைப்பின் பெயரை மாற்ற, வீட்டு வரி ரசீது போடுத்தர லஞ்சம் கேட்பது அடிக்கடி நடக்கிறது. லஞ்சம் அதிகமாக புழங்கும் இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளனர்.

வருவாய் துறையில் லஞ்சம்
விஏஓ, சர்வேயர், தாசில்தார் உள்பட வருவாய்துறையில் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. அவ்வப்போது லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியர்கள் கைதாகும் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. ஆனாலும் லஞ்சம் குறைந்தபாடில்லை.. சென்னையை அடுத்த குன்றத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பட்டா பெயர் மாற்றம்
சென்னை அடுத்த குன்றத்தூர், இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் ரவிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக குன்றத்தூர் இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்.
80 ஆயிரம் கேட்ட விஏஓ
இந்நிலையில் இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் ராபர்ட் ராஜ் என்பவர், ரவிபாரதியின் மனுவை பரிசீலித்துள்ளார். அப்போது விஏஓ ராபர்ட் ராஜ், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.80 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை, ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக ரவி பாரதி கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ரவி பாரதி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார்.
30 ஆயிரம் லஞ்சம்
இந்த புகாரின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ரவி பாரதியிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ரவிபாரதி அலுவலகம் அருகே வந்து செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆர்வமாக வந்தார்
அப்போது கொழுமனிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் லஞ்ச பணத்தை வாங்க ஆர்வமுடன் வந்தாராம். அதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரியாக காரில் வைத்து லஞ்ச பணத்தை வாங்கிய போது, மின்னல் வேகத்தில் வந்து ராபர்ட் ராஜை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications