தீயில் கருகிய சிவசங்கர்.. ஆம்புலன்ஸில் உடல் வந்து இறங்கியதைப் பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்
சென்னை: குவைத் தீ விபத்தில் பலியான சிவசங்கரின் உடல் இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கருகிய உடலைக் கண்ட குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த இந்தியர்களில் 7 பேர் தமிழர்கள் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதையடுத்து, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்த தமிழர்களின் உடலைக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன்படி குவைத் தமிழ்ச் சங்கம், அயலக நலத்துறையை ஒருங்கிணைத்து பணிகளை துரிதப்படுத்தினார் அமைச்சர் மஸ்தான்.
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 46 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானத்தில் நேற்று கொண்டு வரப்பட்டது. அவர்களில் 7 தமிழர்களின் உடல்கள், கொச்சி விமான நிலையத்திலிருந்து தனித்தனி ஆம்புலன்ஸ்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தவகையில் சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன் என்பவரின் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை 4 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் கருகிய சிவசங்கர் உடலைக் கண்டு, அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதையடுத்து, சென்னை இராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் காசிமேட்டில் உள்ள மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (41) அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அவரது உடலைக் காண அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி மொத்த கிராமமுமே காத்திருந்தது. தொடர்ந்து, இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த எபமேசன் ராஜுவின் (53) உடல் நேற்று இரவு 10.22 மணிக்கு அவரது சொந்த வீட்டுக்குச் சென்றடைந்தது. அப்போது ராஜுவின் உடலைப் பார்த்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி மொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications