நில வகைப்பாடு.. வீட்டுமனை பிரிவு.. மறுபடியும் கையில் "லெட்டருடன்" கோட்டைக்கு கிளம்பிய பெயிரா.. அடடே
சென்னை: நில வகைப்பாடு கட்டணம் குறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் முக்கிய வேண்டுகோள் ஒன்று தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அது என்ன?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (பெயிரா), பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

முரண்பாடுகள்: கடந்தவாரம்கூட, வீட்டுவசதி துறை அமைச்சருக்கு பெயிரா தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.. முக்கியமாக, மலைப்பகுதிகளின் அருகிலுள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கால நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
அதுமட்டுமல்ல, சாலைகள், மனைகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள மெட்ரிக் மீட்டர் அளவு மற்றும் சதுரடி அளவுகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இரண்டிற்கும் பொதுவாக சமன் செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும், தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் புதிய வீட்டுமனை பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் அணுகு சாலை ஆறு மீட்டர் என குறைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல முக்கியமான கோரிக்கையை விடுத்திருந்தது.
வீட்டு வசதி: அந்தவகையில் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, இப்போது மீண்டும் ஒரு முக்கிய கோரிக்கையை பெயிரா விடுத்திருக்கிறது.. தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதம் இதுதான்:
தமிழகத்தில் கடந்த 1972ம் ஆண்டு முதல் வீட்டுமனை பிரிவுகளுக்கு DTCP அனுமதி வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் (DCR) அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழகம் முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் விண்ணப்பதாரர்களால் விற்பனை செய்யும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டுமனை பிரிவு: முக்கியமாக, சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை, அது குறித்த தன்மை அறியாமல், சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது என்கிற அடிப்படையில், மேற்கண்ட ஒதுக்கீடுகளை வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து, அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். குறிப்பாக இந்த வீட்டுமனை பிரிவுகளில் திறந்தவெளி நிலம் 5% முதல் 10% வரை தான் ஒதுக்கப்பட்டு இருக்கும்.
இதனை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் தற்போது குடியிருப்பு மனையாக நில வகைப்பாடு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, தற்போதுள்ள (DTCP) நகர் ஊரமைப்புச் சட்டத்தின் புதிய விதிகளின்படி, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள திறந்தவெளி நிலம் போக, தற்பொழுது உள்ள புதிய விதிகளின் படி தேவையான அளவிற்கு திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, அப்படி தேவையான திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில், அப்பாவி பொதுமக்களின் நில வகைப்பாடு மாற்றம் கோரிய விண்ணப்பத்தினை நகர் ஊரமைப்பு துறையினர் நிராகரிக்கின்றனர்.
அடுத்த கோரிக்கை: அப்படி மேற்படி ஒதுக்கீடுகளுக்கு DTCP புதிய விதிகளின்படி தேவையான திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் எனில், அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மொத்த நிலத்தையும் உள்ளாட்சிக்கு எழுதிக் கொடுத்து, மொத்த நிலத்தையும் இழக்க நேரிடும்.
ஆகவே அமைச்சர் அவர்கள், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, DTCP பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, நில வகைப்பாடு மாற்றம் செய்து தரக் கோரி விண்ணப்பித்தால், தற்போதுள்ள DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல், ஏற்கனவே DTCP அனுமதி பெற்றுள்ள மனைப் பிரிவில் உள்ளதை உள்ளபடியே பாவிக்க வேண்டும்.
கட்டணம்: அந்தவகையில், நில வகைப்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு தேவையான கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, நில பயன்பாடு வகைப்பாட்டினை மாற்றம் செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என, மேற்கண்ட வகையில் வகைப்பாடுள்ள ஒதுக்கீடு நிலங்களை வாங்கி வைத்துள்ள அப்பாவி பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெயிரா தலைவர் டாக்டர்.ஹென்றி குறிப்பிட்டுள்ளார்...
பெயிரா எழுப்பியிருக்கும் இந்த கோரிக்கையானது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் தமிழக அரசு இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது..!!












Click it and Unblock the Notifications