நிலத்தகராறு.. மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன், மகளுக்கு முன் ஜாமீன்.. கோர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்களை வைத்து தன்னை மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஜெயக்குமார், மகள், மருமகன் மீது வழக்கு
மகேஷ் குமார் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக ஆதரவாளரை தாக்கிய வழக்கில் கைதான ஜெயக்குமார் இந்த வழக்கிலும் அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்ற படியேறிய ஜெயக்குமார் மகள், மருமகன்
ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், 8 மாதங்கள் கழித்தே தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரசியல் உள்நோக்கம்
மேலும், சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பொய் புகாரில் எந்த தொடர்பும் இல்லாத ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்த இருவரும், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர்.

ஆவணங்களை எடுத்துச் சென்ற ஜெயக்குமார்
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரளித்த மகேஷ் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், "ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது நவீன் குமாரும், மகேஷும் பங்குதாரர்களாக இல்லை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மகேஷ் குமாரை மிரட்டி அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் கணக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்து சென்றார்." எனத் தெரிவித்தார்.

நிபந்தனை முன் ஜாமீன்
வாதங்களை கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தபனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மருமகன் 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவிற்கு 2 வாரம் திங்கட்கிழமை மட்டும் கையெழுத்திடவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications