கோவில் விழாவுக்கு அதிகளவு கூட்டம் செல்வது.. நல்ல அடையாளம் கிடையாது.. அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: ஒரு விளையாட்டை பார்க்க செல்வதும், கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாக கும்பமேளாவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோன்று புஷ்பா பட சிறப்பு காட்சியின் போதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். சமீப நாட்களாக பொது இடங்களில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாக நெட்டிசன்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், "கர்நாடக அரசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. எல்லா இடத்திலேயும் இது மாதிரி நடந்துகொண்டு இருக்கிறது. பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- என்னுடைய தனிப்பட்ட கருத்தை கூறுகின்றேன். இன்றைக்கு பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை நாம் செய்து வருகிறோம். பகுத்தறிவு அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டமைக்க நாம் முயற்சி செய்து வருகிறோம். கோவில் விழாக்களில் அதிகளவிலான கூட்டம் கூடுகிறது. கூட்டமாக விளையாட்டை பார்க்க போவது.. இதையெல்லாம் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. " Don't be a spectator.. be a participant.."நீ பார்வையாளராக இருக்காதே.. பங்கேற்பவர்களாக இரு என்று.. பெங்களூரில் நேற்று கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையை பிடித்து இருப்பார்கள்.. கர்நாடக அரசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. எல்லா இடத்திலேயும் இது மாதிரி நடந்துகொண்டு இருக்கிறது.
மக்களிடம் இதை சொல்கிறேன். என்னுடைய அன்பான வேண்டுகோள் தான் இது. பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலில், முண்டியடித்துக்கொண்டு செல்வதை பொதுமக்களே தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications