சென்னை வந்த விமானம் மீது மீண்டும் ‘லேசர்’ ஒளி.. திணறிப்போன பைலட்.. சென்னை காவல் ஆணையர் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மீண்டும் விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விமானங்கள் மீது லேசர் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மே 27 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. விமானம் தரையிறங்கத் தயாரானபோது, விமானத்தின் மீது லேசர் ஒளி அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.

Chennai airport police

விமானம் மீது லேசர் ஒளி

இதனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானி விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கினார். இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் மிகவும் சக்தி வாய்ந்த லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மீண்டும் லேசர் லைட்

இந்நிலையில், துபாயில் இருந்து 304 பயணிகளுடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னையை நெருங்கிய விமானம் தரையிறங்க தாழ்வான பகுதியில் பறக்க துவங்கியபோது, எதிர் திசையில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.

இதனால், விமானி விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கச் செய்தார். விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு உடனடியாக புகார் தெரிவித்தார். இதற்கிடையே, எந்த பிரச்சனையும் இல்லாமல் பத்திரமாக விமானம் தரையிறங்கியது. இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து வருவது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது.

சென்னை கமிஷனர் எச்சரிக்கை

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். விமானத்தின் மீது லேசர் விளக்கினை ஒளிர செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அருண், பிஎன்எஸ் சட்டப் பிரிவு 163 மற்றும் 14 (2) ஆகியவற்றின்படி பாதுகாப்பு கருதி மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் விளக்குகள் ஒளிரவும், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பறப்பதற்கும் ஜூலை 26 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளிலும், அதன் அருகே உள்ள பிற பகுதிகளிலும் செல்லும் விமானங்கள் மீது லேசர் விளக்குகள் ஒளிரச் செய்தால், விமான வழித்தடங்களில் தொழில்நுட்ப கவனக் குறைவு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். இதன் காரணமாகவே, பாதுகாப்பு கருதி சென்னை பெருநகர காவல் துறை லேசர் ஒளி விளக்குகள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இந்நிலையில், சில நாள்களாக மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானத்தின் மீது சிலர் லேசர் விளக்கை ஒளிரச் செய்ததால், விமான நிலைய கட்டுப்பாட்டறை மூலம் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக விமானம் தரை இறக்கப்பட்டது. இது தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ள தடைகளை மீறி விமானங்களின் மீது லேசர் விளக்குகளை ஒளிரச் செய்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+