லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை செய்தது ஏன்? மனம் திறந்த சகோதரர்!
சென்னை: லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலைக்குப் பின்னால் தங்களின் நிறுவனம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டது? அதிலிருந்து எப்படி மீண்டு வந்தோம்? அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் தான் என்ன என்பது பற்றி அவரது சகோதரர் லக்ஷ்மணன் ஒரு பேட்டியில் விரிவாகப் பேசி இருக்கிறார்.
லைட் மியூசிக் ஆர்கெஸ்ட்ரா உலகில் பல சாதனைகளைச் செய்த நிறுவனம் லக்ஷ்மன் ஸ்ருதி. இவர்கள் நடத்தும் இசைக்கச்சேரிகளில் மின்னணு இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையோடு தொழில் செய்து வருகிறார்கள். இந்நிறுவனம் ஆரம்பித்து இந்த மாதத்துடன் 37 ஆண்டுகள் முடிந்துள்ளது. இன்னிசை உலக சாதனை படைத்து அதன் மூலம் பெயர் எடுத்த ராமன், தனது தற்கொலை மூலம் தலைப்புச் செய்தியாக மாறியது ஒரு விநோதம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டபோது பல்வேறு ஊகங்கள், வதந்திகள் பரவின. இந்த நிறுவனம் எப்படி மீண்டு வரப்போகிறது என்று திரைத்துறையைச் சேர்ந்த பலர் வருந்தினர். ராமன் இழப்புக்குப் பிறகு லேசாக நம்பிக்கை பெற்றுள்ளது லக்ஷ்மன் ஸ்ருதி.
ராமனின் சகோதரர் லக்ஷ்மணன் மனம் திறந்து சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அன்று நடந்த தற்கொலை எந்தளவுக்கு இவர்களின் வாழ்க்கையை, தொழிலைப் பாதித்தது என்று பேசியுள்ளார். ராமன் தற்கொலைக்குப் பின்னால் இருந்த அழுத்தம் என்ன? அந்த முடிவை ஏன் அவர் எடுத்தார் என விளக்கிப் பேசி இருக்கிறார்.
லக்ஷ்மணன் பேசுகையில், "எங்கள் நிறுவனம் சார்பாக இரண்டு, மூன்று திட்டங்களில் சொந்தமாக முதலீடு போட்டுத் தயாரித்தோம். அதில் ஒரு பொருளாதார சரிவு ஏற்பட்டது. அந்தச் சரிவு பற்றி எங்களுக்குத் தெரியாது. காரணம், பொருளாதார ரீதியாக அனைத்து விசயங்களையும் அவர்தான் நிர்வகித்து வந்தார். எப்போதும் போல அவர் சொல்லும் வேலைகளில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வந்தோம்.
ஆகவே எங்களுக்கு என்ன வருமானம்? எவ்வளவு நஷ்டம் என்பது தெரியாது. நெருக்கடி அதிகமான பிறகு கடைசியாக அவர் இறப்பதற்கு முன்னால் நஷ்டத்தைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். உடனே நான், 'பரவாயில்லை. ஒரு ஆறு மாதம் வரை நான் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறேன். நீ வீட்டில் கொஞ்சம் ரெஸ்ட் எடு. உன் மனநிலைக்கு ஏற்ற மாதிரி அலுவலகம் வந்து போ' என்று சொல்லி இருந்தேன்.
அதேநேரத்தில் அவருக்கு நுரையீரலில் ஒரு தொற்று இருந்தது. அதனால் வேறு உடல்ரீதியாகத் தொந்தரவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். கூடவே நிதி நெருக்கடியும் ஏற்பட்டதால், அவர் மனரீதியாகச் சோர்ந்துவிட்டார் என்பதை நாங்கள் யூகித்தோம். அனைவரிடமும் சகஜமாகப் பழகிவந்த அவர் திடீரென்று அமைதியாகிவிட்டார். யாரிடமும் பேசுவதே இல்லை. நாங்கள் நிலைமையை யூகிப்பதற்கு முன்பு திடீரென்று ஒரு நாள் அவர் இந்தத் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.
அவர் இழப்பிலிருந்து நிறுவனத்தை மீட்டுக் கொண்டுவருவதற்குப் போராடினோம். இப்போதுதான் மெல்ல மெல்லச் சமாளித்து வருகிறோம். கூடவே 2 ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு எங்கள் தொழிலை அப்படியே முடக்கிப் போட்டுவிட்டது. இந்த நிறுவனம் தொடங்கி 37 வருடங்களை நிறைவு செய்திருக்கிறோம். அதில் 30 வருடங்கள் வரை இதனைத் தாங்கிப் பிடித்து நடத்தியவர் ராமன் தான். அவர்தான் பல சாதனைகளை விதவிதமாக செய்தார்.

இயக்குநர் பாலுமகேந்திராவை எங்களுக்குப் பிடிக்கும். ஆகவே ஒரு கச்சேரிக்கு அவரை அழைத்தோம். அவர் உடனே சம்மதித்துவிட்டார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவருக்காக ஏதேனும் புதுமை செய்ய வேண்டும் என விரும்பினோம். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒருவிதான லைட் செட் பண்ணோம். ஆரஞ்சு, மஞ்சள், அல்ட்ரா எல்லோ எனப் பல வண்ண விளக்குகளைப் பயன்படுத்திய நாங்கள், ஒரு பாடல் முழுவது பெட்ரோமாக்ஸ் லைட் அமைத்துப் பாடினோம். மற்றொரு பாடலுக்கு வெறும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்திப் பாடினோம். மொத்தம் 32 பாடல்கள். அத்தனைக்கும் விதவித விளக்குகளைப் பயன்படுத்தினோம். ஒரு பாட்டு முழு இருட்டில் வாசித்தோம்.
பாலுமகேந்திரா என்றால் திரையில் லைட்டிங் வைப்பதில் பெரிய திறமைசாலி. ஆகவே அப்படிச் செய்தோம். இதை யோசித்துச் செய்தவர் ராமன் தான். மிகவும் பொறுமைசாலி. ஒருவர் கச்சேரி புக் செய்ய வந்தால் அவர்களிடம் உட்கார்ந்து நிதானமாக 5 மணிநேரம் பேசுவார். அவரை இழந்தது எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications