செய்தி கேட்டதும் பதறிப் போன ரசிகர்கள்.. ரஜினிகாந்த் நலம்பெற தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர் விரைவில் உடல் நலம் பெற ஆளுநர் ஆர்.என்.ரவி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சசிகலா உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வேட்டையன் படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”"திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்." - ஆளுநர் ரவி" என கூறப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,”நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”அனைவரையும் சமமாக மதித்து, எல்லோரையும் நேசிக்கும் பண்பு கொண்ட, அன்பு சகோதரர் 'சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி ஓபி ரவீந்தரந்நாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”நமது பழம்பெரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த், உடல் நலத்துடன் பூரண குணமடைய வாழ்த்துகள், அவர் விரைவில் குணமடைய நம்முடைய விருப்பங்களையும், பிரார்த்தனைகளை அனுப்புகிறோம்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications