அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. அதிமுகவில் சி.வி. சண்முகம் தலைமையிலான பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது இணையவோ திட்டமிட்டால், அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 91-வது திருத்தத்தின்படி, ஒரு கட்சியில் இருந்து பிரிந்து செல்லவோ அல்லது மற்றொரு கட்சியுடன் இணையவோ குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த விதியை மீறினால் உறுப்பினர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது.

3ல் 2 பங்கு என்றால் என்ன?
தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 47 எம்எல்ஏ-க்களாக உள்ளது. இந்த விதியின்படி, அதிமுகவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவு பிரிந்து செல்லவோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்படவோ வேண்டும் என்றால், மொத்தம் உள்ள 47 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கட்டாயமாகும். இந்த எண்ணிக்கையை விடக் குறைவான எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
இதன் காரணமாக தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் அதிமுக தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் 47 எம்எல்ஏ-க்களில் 32 பேரின் ஆதரவைத் திரட்டுவது என்பது தற்போதுள்ள சூழலில் எளிதான காரியம் அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த அளவுக்கு ஆதரவு இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு இணைப்பு முயற்சியும் வெறும் அரசியல் அடையாளமாகவே இருக்குமே தவிர, சட்டப்படி செல்லுபடியாகாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக-தவெக கூட்டணி
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வழிகளைத் தேடி வருகிறது. கூட்டணி அமைக்க அதிமுக தலைமுறை மறுத்துவிட்டது. இந்தச் சூழலில், அதிமுகவின் ஒரு குறிப்பிட்ட தரப்பு தவெகவுடன் கைகோர்க்கலாம் என்ற யூகங்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்தச் சட்டச் சிக்கல் காரணமாக அந்த முயற்சிகளுக்குத் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications