வெறும் அபராதம் மட்டும் போதாது! உரிமத்தையும் ரத்து பண்ணலாம்! ஹைகோர்ட் உத்தரவால் ஆடிப்போன ஆம்னி பஸ்கள்
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் மட்டும் இன்றி உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் ஆம்னி பஸ்களுக்கும் பிரத்யேக பேருந்து நிலையம் இயங்கி வந்தது. சென்னையில் கோயம்பேடு பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் இறுதியில் திறந்து வைத்தார். அதன் பிறகு படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்த போதிய வசதி இல்லை என்றும் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் வரும் வரை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து வந்தது. ஆனால் இதை தமிழக அரசு ஏற்க மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
3 இடங்களை தவிர: இதில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், சூரப்பட்டு, போரூர் டோல்கேட் ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி அளித்தது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அங்கு வாதங்களை முன்வைக்குமாறு கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில்,
சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது..
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
உரிமம் நிறுத்தி வைக்கப்படும்: இது ஒருபக்கம் இருக்க ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை நிறுத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறுகையில், அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்பட போவது இல்லை என்றும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications