சிறுமிக்கு 13 வயசு தான்.. வன்கொடுமை செய்த தாத்தா, சித்தப்பா & அண்ணன்கள்! ஆயுள் தண்டை விதித்து அதிரடி
சென்னை: தலைநகர் சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆயுள் தண்டை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பாலியல் ரீதியிலான குற்றங்கள் சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல பெண்கள் துணிச்சலாகப் புகார் தரவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

13 வயது சிறுமி
அப்படியொரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் பெற்றோரைப் பிரிந்து வாழும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குழந்தை நலக்குழு மூலம் பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறல்
சென்னையில் 13 வயது சிறுமி, அவரது பெற்றோரை விட்டுப் பிரிந்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாகப் பள்ளி நிர்வாகம் அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மயிலாப்பூர் போலீசாரில் புகார் அளித்தார்கள்.

தாத்தா, உள்ளிட்ட உறவினர்கள்
இந்தச் சம்பவம் கடந்த 2015-16 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிறுமி பல முறை வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். அதில் சிறுமியைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த தாத்தாவே அத்துமீறியுள்ளார். இந்த வழக்கில் சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை
அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம் அதிரடி
மேலும் சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். இது தவிரப் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்குத் தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பு அளிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலவச தொடர்பு எண்
பொதுவாகக் குழந்தைகளிடம் தான் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் அதிகம் நடைபெறுகிறது. அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் மனித மிருகங்கள் இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற அத்துமீறல்களைத் துணிச்சலாகச் சொல்லக் குழந்தைகளுக்குப் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் எதாவது பிரச்சினைகளை எதிர்கொண்டால் 1098 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications