சென்னையில் ஒரு டூரிஸ்ட் பேமிலி.. 6 ஆண்டுகளாக தங்கிய குடும்பம் சிக்கியது.. அடுத்து நடந்தது என்ன?
சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் வருவதைப் போல் 6 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து வந்து சட்டவிரோதமாக சென்னையில் ஒரு குடும்பம் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக ஆதார் அட்டை தொடங்கி பாஸ்போர்ட் வரை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து உளவுத்துறைக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரூ.7 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ரூ.90 கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாகப் படகு ராமேஸ்வரம் வரும் சசிக்குமாரின் குடும்பம், சென்னையில் குடியேறுவார்கள்.

டூரிஸ்ட் ஃபேமிலி
இலங்கைத் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சசிக்குமார் குடும்பம் வாழ்ந்து வரும். இவர்களுக்கு யோகி பாபு, போலி ஆதார் அட்டை, போலி வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றைத் தயார் செய்து கொடுப்பார். இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் வரும் சம்பவம் ஒரிஜினலாகவே அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது.
யார் இந்த அர்ஷத்?
சென்னையில் புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி பகுதியில் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்ஷத். இவர் ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அர்ஷத் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வருவதாக உளவுத்துறை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக அர்ஷத்தை போலீசார் விசாரித்துள்ளனர்.
இலங்கையில் நடந்தது என்ன?
அந்த விசாரணையில், அர்ஷத் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து சென்னையில் குடியேறி இருக்கிறார். இலங்கையில் அர்ஷத் மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக இவர்களுக்கும், மற்றொரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இம்ரானை அந்த கும்பல் 2017ல் கொலை செய்திருக்கிறது.
சென்னையில் செட்டில்
இதனால் உயிருக்குப் பயந்து அர்ஷத், 2019ல் தமிழ்நாடு வந்துள்ளார். இங்கு வந்து சென்னையில் வீடு பார்த்து செட்டிலான பின், குடும்பத்தினரையும் அழைத்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னையைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் என்பவர் மூலமாக ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார். ஆதார் அட்டை மூலமான பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ரேஷன் கார்டு என்று அத்தனையையும் பெற்றுள்ளார்.
போலி ஆவணங்கள்
அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு போலி ஆவணங்களைக் கொடுத்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அண்மையில் ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்ஷத்திடம் விசாரணை நடத்திய பின், இலங்கை தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாடு கடத்தல்
இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தங்கிய அர்ஷத் நேற்று காலை விமானம் மூலமாக மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர்த்து அத்தனையும் அப்படியே நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications