மெஸ்ஸி-க்கு கொடுத்தது 120 கோடி.. இந்திய கால்பந்து வீரர்கள் தெருக்கோடி! அதிர்ச்சி ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகை இந்த வாரத்தின் முக்கிய பேசுபொருளானது. ரசிகர்கள் கூட்டம், கேமராக்கள், விஐபி பாஸ் என 'வரலாற்று நிகழ்வு' அரங்கேறியது. பல கால்பந்து ஆர்வலர்களுக்கு இந்த ஆரவாரம் உற்சாகம் தரவில்லை. நாட்டின் கால்பந்தாட்டமே அவசர சிகிச்சை நிலையில் இருக்கும்போது, ஒரு உலக நட்சத்திரத்தின் வருகையை ஆடம்பரமாகக் கொண்டாடுவது எப்படிச் சரி எனும் கேள்வி பரவலாக எழுந்தது.

மெஸ்ஸியை இந்தியாவுக்குக் கொண்டுவர ஏற்பாட்டாளர்கள் சுமார் ₹120 கோடி செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது கட்டணம், தனியார் ஜெட், பாதுகாப்பு, விருந்தோம்பல், செயல்பாட்டுச் செலவுகள் இதில் அடங்கும்.

கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப்கள், அரசு பார்ட்னர்ஷிப்கள், ₹10,000 முதல் ₹30,000 வரை விற்ற டிக்கெட்டுகள், ஒரு நபருக்கு ₹10 லட்சம் காசு வாங்கி நடத்தப்பட்ட தனியார் சந்திப்புகள், தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் இந்த முதலீட்டை ஈடுசெய்ய திட்டமிடப்பட்டது. பணம், அதிகாரம், பளபளப்பின் கலவையே 72 மணி நேர கால்பந்து 'ராயல்டி’யை சாத்தியமாக்கியது.

இந்த ஆடம்பரத்தை உள்நாட்டு கால்பந்து யதார்த்தத்துடன் ஒப்பிட்டால், கடந்த ஓராண்டு இந்திய கால்பந்து வரலாற்றில் இருண்ட அத்தியாயமே. நாட்டின் சிறந்த கால்பந்து லீக்காக கருதப்பட்ட, இந்தியன் சூப்பர் லீக் (ISL) தேக்கத்தில் உள்ளது.

வணிக உரிமைகளுக்கு வாங்குபவர்கள் இல்லாததால், சீசன் தொடங்கவில்லை. சுமார் 300 இந்திய கால்பந்து வீரர்கள் சும்மா இருக்கிறார்கள். சுனில் சேத்ரி, குர்பிரீத் சிங் சந்து போன்ற மூத்த வீரர்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, சமூக வலைத்தளங்களில் “உதவி தேவை” என பதிவிட்டனர்.

ரிலையன்ஸ் ஒரு தசாப்த காலம் ISL-ஐ நிர்வகித்தது. தொடர் இழப்புகள், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புடன் (AIFF) ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விலகியது. கீழ்மட்ட லீக்குகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

இந்தியாவின் இரண்டாம் தர ஆண்கள் லீக்கான ஐ-லீக்கின் செயல்பாடுகளுக்கு இந்த ஆண்டு ஒரு இன்ச் கூட வரவில்லை. இது AIFF-ன் நிர்வாகத் திறமையின்மையை மட்டுமல்ல, விளையாட்டு மீதான ஆழமான அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

football

இப்போது, நிதி நிலைமையைப் புரிந்துகொள்வோம். இந்தியன் சூப்பர் லீக்கின் ஒரு சீசனை நடத்த சுமார் ₹100 கோடி செலவாகும். AIFF விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்சம் ₹37.5 கோடி உத்தரவாதமாக கோருகிறது.

இதன் பொருள், நாட்டின் சிறந்த கால்பந்து லீக்கின் மூன்று முழு சீசன்களுக்கான மார்க்கெட்டிங் மற்றும் கட்டுப்பாட்டு உரிமைகளை, மெஸ்ஸியின் மூன்று நாள் இந்தியப் பயண செலவில் பெற முடியும். ஆயினும், எந்த கார்ப்பரேட் நிறுவனமும் முன்வரவில்லை.

எந்த மாநில அரசும் 'பார்ட்னர்ஷிப் கட்டணம்' வழங்கத் தயாராக இல்லை. பணக்காரர்கள் கூட விளையாட்டுக்கு ஆதரவளிக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய நடுத்தர வகுப்பினரும் தற்போது காணப்படவில்லை.

மத்திய அரசும் இந்நிலையிலிருந்து கிட்டத்தட்ட விலகியுள்ளது. ISL-க்கு நிதி அல்லது செயல்பாட்டு உதவி செய்ய முடியாது என்று விளையாட்டு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது முழுமையாக பங்குதாரர்களின் பொறுப்பு.

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், 2036 ஒலிம்பிக்கிற்கு ஏலம் கோரவும் கனவு காணும் ஒரு நாட்டில் இவை அத்தனையும் நடப்பது முரண்பாடானது.

இப்போது தேசிய அணியின் நிலையைப் பார்ப்போம். இந்திய ஆண்கள் கால்பந்து அணி தற்போது FIFA தரவரிசையில் 142வது இடத்தில் உள்ளது; இது கடந்த பத்தாண்டின் மிக மோசமான செயல்திறனாகும். வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிடம் சமீபத்திய தோல்விகள் வந்துள்ளன.

ஆசியாவின் முக்கிய சக்தியாகக் கருதப்பட்டதில் இருந்து இன்று SAFF மட்டத்தில் கூட போராடும் நிலை வரை, இந்திய கால்பந்தின் சரிவு வேகமானதும் வேதனையானதுமாகும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைப் போலவே கவலையளிக்கிறது.

மற்றொரு கசப்பான உண்மை என்னவென்றால், இந்தியா அடுத்த AFC ஆசிய கோப்பைக்குக் கூட தகுதி பெறவில்லை. FIFA உலகக் கோப்பைப் போட்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இந்திய கால்பந்து அணி இப்போது ஆசியாவின் டாப் 24 அணிகளில் கூட இல்லை. கால்பந்து உலகின் பலவீனமான பகுதியாகக் கருதப்படும் ஆசிய கண்டத்தில் கூட நாம் பின்தங்கியுள்ளோம். தொடர்ந்து மூன்று ஆசிய கோப்பைத் தொடர்களில் இந்தியா பங்கேற்றதால், இந்தச் சரிவு மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

இது ஒரு கருத்தை உறுதிப்படுத்துகிறது: இந்தியாவில் மக்கள் விளையாட்டைக் காட்டிலும் விளையாட்டு நட்சத்திரங்களையே விரும்புகிறார்கள். இந்த அடிப்படைக் கட்டமைப்பு மாற்றம் இன்றி கால்பந்து எழுச்சி பெறுவது கடினம்.

இந்திய கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவது மெஸ்ஸியின் பொறுப்பல்ல. ஒரு சூப்பர்ஸ்டாரின் வருகை சீர்குலைந்த அமைப்பை மாற்றிவிடும் என்று எதிர்பார்ப்பது வெகுளித்தனமே. ஆனால், இந்திய கால்பந்தின் நன்மைக்காக வேறு ஏதாவது செய்ய முடியாதா?

விஐபி-களுக்கான பிரத்தியேக நிகழ்வுக்குப் பதிலாக, மெஸ்ஸி அரை மணிநேரம் அண்டர்-17, அண்டர்-23 அல்லது பெண்கள் சீனியர் அணிகளுடன் (சமீப காலங்களில் நம்பிக்கையை அளித்தவர்கள்) செலவிட்டிருந்தால், இந்த வருகையின் நோக்கம் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

ஆகவே, நட்சத்திரங்களின் பிரகாசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு, அடிப்படைக் கட்டமைப்பு இருட்டிலேயே சிதைந்து கொண்டிருக்கும் வரை, இந்திய கால்பந்து தூரத்திலிருந்து மற்றவர்களின் சிறப்பைக் கைதட்டிப் போற்றும்; அதன் சொந்த அடித்தளமோ அமைதியாக சரிந்து கொண்டிருக்கும்.

அரசியல் மட்டுமல்ல, விளையாட்டிலும் நட்சத்திரங்களை நோக்கி போவது, உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தராது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+