காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்கள் - ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வாக்காளர் பட்டியல், வார்டு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கால் நிறுத்தப்பட்டது. இதனால் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. இதனிடையே புதிதாக 9 மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு கிராம புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்கள் காலியாக உள்ளன. நகர்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 510 இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications