‛டார்கெட் 370’.. லோக்சபா தேர்தலில் பாஜக சாதிக்க மோடி வியூகம் இதுதான்! எதிர்க்கட்சிகளுக்கு ‛செக்’
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் எனவும், இதில் பாஜக மட்டும் 370 இடங்களிலும் ஜெயிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் டார்கெட் 400-யை சாதித்து காட்ட பாஜக கையில் எடுத்துள்ள முக்கிய வியூகம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெல்ல வேண்டுமு். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து மாநில கட்சிளும் தயாராகி வருகின்றன.

கடந்த 2014, 2019 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. கடந்த 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்று அசத்தியது. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை என்பது 300யை கடந்து 303 என்ற அளவில் உள்ளது.
400 தொகுதி இலக்கு: இந்த 2 தேர்தல்களில் வென்றதன் மூலம் பிரதமராக மோடி பதவியேற்று இன்று வரை செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வென்று மத்தியில் 3வது முறையாக அதாவது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக உள்ளது. குறிப்பாக தற்போது பாஜக இன்னொரு முழக்கத்தை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெல்ல வேண்டும் எனவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக + கூட்டணி கட்சிள்)என்பது 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தான் அந்த முழக்கம். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமர் மோடியை இதனை தெரிவித்தார். பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும், பாஜக 370 தொகுதிகளிலும் வெல்லும் என அவர் கூறினார்.
பாஜக வியூகம்: இத்தகைய சூழலில் தான் பலருக்கும் பாஜக 370 தொகுதிகளில் வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த கட்சிகளும் இவ்வளவு தொகுதிகளை கைப்பற்றாத சூழலில் பாஜகவின் இந்த முயற்சி கைக்கூடுமா? என பலரும் கேட்கின்றனர். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட எதிர்க்கட்சிகள் தனித்தனியே களமிறங்கிய சூழலில் இந்த முறை ‛இந்தியா' கூட்டணி என்ற பெயரில் ஒன்றாக இணைந்துள்ளன. இதன்மூலம் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.
இப்படி ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் நிலையில் ‛தாமரை' கட்சி தலைவர்கள், குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், அவர்களின் கூட்டணி 400 தொகுதிகளை வெல்லும் என கூறி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையில் பாஜக அந்த இலக்கை நோக்கி தான் பயணிக்கிறது.
காங்கிரஸ் VS பாஜக: மேலும் இலக்கை நோக்கி பயணிப்பது மட்டுமின்றி அதனை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழ்த்தி காட்டும் முனைப்பில் பாஜக தீவிரமாக வியூகம் அமைத்து களப்பணியை தொடங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் தேர்தலில் வியூகம் வகுத்து வெல்வதில் கைதேர்ந்த கட்சியாக பாஜக இருக்கிறது. இதனை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சாத்தியப்படுத்த அந்த கட்சி தலைமை நினைக்கிறது.
தற்போதைய சூழலில் பாஜகவுக்கு பெரும் சவாலாக இருப்பது மாநில கட்சிகள் தான். ஏனென்றால் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்ளில் தான் பாஜகவின் செல்வாக்கு என்பது குறைந்து காணப்படுகிறது. மாறாக காங்கிரஸ் - பாஜக நேரடியாக மோதும் மாநிலங்களில் பாஜக மிகவும் வலுவாகவே இருக்கிறது. இதற்கு உதாரணம் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தை கூறலாம். இந்த மாநிலங்களில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு பிரதான போட்டி என்பது காங்கிரஸ் VS பாஜக என்று இருந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்தது.
பாஜகவுக்கு புது தெம்பு: அதாவது எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய முடியாது என பாஜக தலைவர்கள் முதலில் நினைத்தனர். ஆனால் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கியது பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸை வீழ்த்தி கிடைத்த வெற்றி என்பது பாஜகவுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது.
மேலும் ‛இந்தியா' கூட்டணி அமைய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆர்ஜேடி கட்சி பாஜகவுடன் இணைந்தது. ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரஸ் இன்றி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது உள்ளிட்டவை பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாகவும், அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணியிலேயே ஒற்றுமையில்லை என்பதை பறைசாற்றும் விதமாக இருப்பதாக பாஜக கூறி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில்: மேலும் 500 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்க கைக்கொடுக்கும் என பாஜக நினைக்கிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் 400 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் நம்புகின்றனர்.
மேலும் 2014யை ஒப்பிடும்போது 2019ல் அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அதாவது 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மொத்தம் 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 282 தொகுதிகளில் வென்றது. அதன்பிறகு 2019ல் பாஜக 436 தொகுதிகளில் களமிறங்கி 303 தொகுதிகளில் வென்றது. 2014யை ஒப்பிடும்போது பாஜக கூடுதலாக 21 தொகுதிகளை கைப்பற்றியது. அதேபோல் இந்த முறையும் சரியான வியூகத்துடன் செயல்பட்டால் பாஜக 370 தொகுதிகளில் வாகை சூடலாம் என அந்த கட்சி தலைவர்கள் நம்புகின்றனர்.
பணியை தொடங்கிய பாஜக: அதாவது தற்போது பாஜகவுக்கு 303 லோக்சபா எம்பிக்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 370 ஆக்க வேண்டும் என்றால் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் தேர்தலில் கூடுதலாக 67 தொகுதிகளை வெல்ல வேண்டும். இதற்கு தான் பாஜக தற்போது மாஸ்டர் பிளானை வகுத்து களப்பணியை தொடங்கி உள்ளது.
இதற்கான பெரிய அளவில் பாஜக ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதாவது 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கட்சி வென்ற தொகுதி, தோற்ற தொகுதிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும்போது 2019ல் மேற்கு வங்கத்தில் கூடுதலாக பாஜக 16 தொகுதிகளையும், கர்நாடகாவில் 8 தொகுதிகளையும், ஒடிசாவில் 7 தொகுதிகளையும், ஹரியானா, தெலுங்கானாவில் தலா 3 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. மாறாக உத்தர பிரதேசத்தில் 9 தொகுதிகளையும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஆந்திராவில் 2 தொகுதியையும், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியையும் பறிகொடுத்துள்ளது.
133 தொகுதிகளில் கவனம்: அதன்படி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்த 133 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 59 தொகுதிகள் தென்மாநிலங்களில் தான் உள்ளன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தான் உள்ளன. இந்த 133 தொகுதிகளில் வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற வகையில் அந்த கட்சி தனிக்கவனம் செலுத்தி பணியை தொடங்கி உள்ளது.
இந்த 133 தொகுதிகளில் 72 இடங்களில் (மேற்கு வங்கத்தில் 22, உத்தர பிரதேசத்தில் 16, ஒடிசாவில் 11, தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் அடங்கும்) பாஜக 2ம் இடம் பிடித்தது. இதில் 56 தொகுதிகளில் காங்கிரஸ் இன்றி பிற மாநில கட்சிகள் தான் பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி உள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 14 தொகுதிகள், தெலுங்கானாவில் 9 தொகுதிகள் உள்பட 31 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 7 தொகுதிகளில் பாஜக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதில் 4 தொகுதிகள் ஆந்திராவில் தான் உள்ளன. மேலும் 23 தொகுதிகளில் பாஜக 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 5, 6, 7 ஆகிய இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
டார்கெட் சாத்தியமா?: இந்த தொகுதிளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்லும் வகையில் பாஜக வியூகம் வகுத்து களப்பணியை தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஜக கடந்த முறை 72 இடங்களில் 2ம் இடம் பிடித்துள்ளது. அதேபோல் 31 தொகுதிகளில் பாஜக 3ம் இடம் பிடித்துள்ளது. இந்த 103 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் தற்போது பாஜக கைவசம் உள்ள தொகுதிகளை தக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பாஜகவின் 370 தொகுதி இலக்கை சாத்தியப்படுத்தி சாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பிரதமர் மோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் பாஜகவின் இந்த வியூகம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கைக்கொடுத்து ‛டார்கெட் 370' என்பதை அடைந்து சாதிக்குமா? இல்லையென்றால் பாஜகவின் வியூகத்தை எதிர்க்கட்சிகள் முறியடிக்குமா? என்பதை அறிய நாம் இன்னும் சில மாதம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications