45 ஆண்டுகளுக்குப் பின் சரித்திரம்..தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 'தலித் தலைவர்' செல்வப் பெருந்தகை!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தலித் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் கே.எஸ்.அழகிரி. கடந்த சில ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்கிற பேச்சுகள் அடிபட்டன. கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் அப்பதவியை பெறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் என பலரும் டெல்லியில் முகாமிட்டு லாபிகளை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளில் பயணித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் செல்வப் பெருந்தகை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். 1979-80 காலகட்டத்தில் முதுபெரும் தலித் தலைவரான இளையபெருமாள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பதவி வகித்தார். 1980 லோக்சபா தேர்தல் காலத்தில் இந்திரா காந்தி, இளையபெருமாள், ஜிகே மூப்பனார் இணைந்து வீதி வீதியாக தேர்தல் பிரசாரம் செய்த காட்சிகள் பெரும் தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது என்பது மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.
செல்வப் பெருந்தகை: மறைந்த பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்தவர் செல்வப் பெருந்தகை. பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார். அங்கிருந்து தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். விசிகவில் இருந்து விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து தமிழ்நாடு தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸில் தொடர்ந்து பயணிக்கிறார். தற்போது ஶ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் செல்வப் பெருந்தகை.
யார் இளையபெருமாள்?: முதுபெரும் தலித் தலைவரான இளையபெருமாள், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, தலைவராக இருந்தவர். 1952 இல் அரசியல் பணியில் ஈடுபட்ட அவர், கடலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் நேரு அமைச்சரவையில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். இக்கமிட்டியின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, 1969 ஜனவரி 30 அன்று இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வெளியிடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1976 முதல் மூன்றாண்டுகள் தமிழ் நாடு காங்கிரசின் 'அரிஜன செல்' தலைவர் பதவி வகித்தார். 1979 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார். பிறகு, 1980 இல் எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு 1989 இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கிய இளையபெருமாள், 2003 இல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். தமிழ்நாடு அரசு, இளையபெருமாளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications