டிடிவி தினகரனும் இருக்காரே.. தேனி, திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர்கள் யார் தெரியுமா? முக்கிய தகவல்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி, திருச்சி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமமுக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த தொகுதிகளில் யார் போட்டியிட உள்ளனர்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

பாஜக கூட்டணியை பொறுத்தமட்டில் அந்த கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாமக 10 தொகுதிகளிலும், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
இதுதவிர ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ராமநாதபுரம், பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு சிவகங்கை, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தென்காசி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி மற்றும் திருச்சி லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் யார் போட்டியிட உள்ளனர்? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இவர் ஏற்கனவே தேனி தொகுதி எம்பியாக இருந்துள்ளார். மேலும் ஓ பன்னீர் செல்வத்துடன், டிடிவி தினகரன் நெருக்கமாக இருப்பதோடு, இருவரும் பாஜக கூட்டணியில் உள்ளனர். மேலும் தற்போது தேனியில் சிட்டிங் எம்பியாக ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் தான் எம்பியாக உள்ளார்.
இதனால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதால் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும், அதிமுக சார்பில் விடி நாராயணசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி லோக்சபா தொகுதியில் செந்தில் நாதன் என்பவர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் திருச்சி மாநகராட்சியின் 47 வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இவர் பிஇ முடித்து லண்டனில் எம்பிஏ படித்துள்ளதோடு, திருச்சியில் செல்வாக்கு பெற்றவராக இருப்பதால் செந்தில் நாதனை திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் கருப்பையா பன்னீர் செல்வம் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளிவராத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ளது. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளது. குக்கர் சின்னம் கேட்டு ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தது. அதனை ஏற்று தேர்தல் ஆணையமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications