லோக்சபா தேர்தல் வியூகம்: அமித்ஷாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை தருகிறார். சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தயவுடன் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவுக்கு சில இடங்கள் பெற்றாக வேண்டும் என்பதில் அக்கட்சியின் டெல்லி மேலிடம் மும்முரமாக இருக்கிறது. இதனால் இப்போதே லோக்சபா தேர்தல் பணிகளை பாஜக தொடங்கிவிட்டது.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. தென்சென்னை
ஆலோசனைக் கூட்டத்தில்தான், தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசியதாக தகவல்கள் பரவின. இதனால் பிரதமர் வேட்பாளர் மோடியை அமித்ஷா எதிர்க்கிறாரா? என சர்ச்சைகள் வெடித்து ஓய்ந்தன.
அதேபோல தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும் என அமித்ஷா பேசிய பேச்சின் அனல் இன்னமும் ஓயவில்லை. அமித்ஷாவின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்து; அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருந்தார். அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மேலும் சர்ச்சையானது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை தருகிறார். சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் அருகே இரும்புலியூரில் இன்று மாலை நடைபெறும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இப்பொதுக் கூட்டம் முடிந்த பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் ராஜ்நாத்சிங்.












Click it and Unblock the Notifications