திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை.. .விசிக இன்று செல்லாதது ஏன்? திருமாவளவன் விளக்கம்
சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக விசிக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், விசிக பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி பங்கீட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் ஆளாக கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கொங்கு நாடு தேசியமக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த முறை ஒதுக்கிய 2 தொகுதிகளுடன் சேர்த்து 1 பொது தொகுதியைக் கூடுதலாக ஒதுக்கச் சொல்லி கேட்கிறது. ஆனால், கடந்த முறையைப் போலவே 2 சீட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி வருகிறது திமுக தரப்பு. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விசிகவை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்று அழைத்து இருந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு இன்று விசிக செல்லவில்லை. இதனால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:-
உயர் நிலைக் குழு கூட்டம் உரிய நேரத்தில் நிறைவடையாததால் இன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. திமுகவுடன் அடுத்த ஓரிரு நட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் திரும்ப திரும்ப கேட்போம். கூட்டணியில் இடைவெளி ஏற்பட்டால் அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டாம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications