உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னைக்கு நைட் மழை விடாது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உள்பட 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தென்காசியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா என தமிழகம் முழுக்க லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

பரவலாக பெய்யும் மழை
இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. ஒருசில அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே கனமழை கொட்டி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, பாபநாசம், விகேபுரம், தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், கடையம், குற்றாலம், சங்கரன் கோவில், கடையநல்லூர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
இதேபோன்று விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்பட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
22 மாவட்டங்களுக்கு அலர்ட்
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை வெளுக்கும். இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த இரு நாட்களில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
இன்று செவ்வாய்க்கிழமை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்
நாளை புதன்கிழமை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications