காற்றழுத்த மண்டலமாக வலு பெற்றது தாழ்வு பகுதி! சென்னைக்கு 430 கி.மீ தொலைவில் நகர்ந்து வருகிறது
சென்னை: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது, காற்றழுத்த மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. தற்போது அது சென்னைக்கு 430 கி.மீ கிழக்கு தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.
Recommended Video
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த தொடர் மழைக்கு காரணம் மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான். இந்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் இரவு 8.30 மணி தகவல்படி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அது சென்னைக்கு 430 கி.மீ கிழக்கு தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையில், காற்றழுத்த மண்டலம் உள்ளது.

அதிகாலை தமிழகம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 11ம் தேதி அதிகாலையில் தமிழ்நாடு கடலோர பகுதியை வந்து சேரும். இதன் பிறகும் காற்றழுத்த மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு பகுதியையும் தெற்கு ஆந்திர பகுதியையும் கடந்து செல்லும். காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய பகுதிகளுக்கு இடையே நவம்பர் 11ஆம் தேதி மாலை இது கரையை கடக்கும்.

வட தமிழகம்
இதன்காரணமாக 10-ஆம் தேதி புதன்கிழமை வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் . தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் ராயலசீமா பகுதிகளிலும் இந்த மழை பாதிப்பு இருக்கும்.

மிக கன மழை பெய்யும்
நவம்பர் 11ஆம் தேதி வியாழக்கிழமை பொறுத்தளவில் வடக்கு கடலோர பகுதிகள், தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தெற்கு கர்நாடகாவின் உள் பகுதிகளிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
45 கிலோ மீட்டர் முதல் 65 கி.மீ வரை கடலோர பகுதிகளில் நாளை காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11ம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications