தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை : வங்கக் கடல், அரபிக்கடலில் காற்றழுத்தம் - சூறாவளி வீசும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதே போல மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வர உள்ள நிலையில் பரவலாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. உத்திரமேரூர், வெம்பாக்கம், காட்டுமன்னார்கோவிலில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழி, மணல்மேடு, மயிலாடுதுறையில் தலா 7 செமீ மழையும், பெனுகொண்டாபுரம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூரில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது. விழுப்புரம், காரைக்கால், ஜெயங்கொண்டம், அரக்கோணத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும்.

கோவை, நீலகிரியில் மிக கனமழை
நாளைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும். ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி கள்ளக்குறிச்சி, காஞ்சிபுர,ம் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும்.

மழை நீடிக்கும்
அக்டோபர் 17ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.18ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

கடலுக்குள் செல்ல வேண்டாம்
அக்டோபர் 15 முதல் 18 வரை மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்காளம், பங்களாதேஷ், ஒடிசா கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடலில் சூறாவளி
14 மற்றும் 15ஆம் தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications