முதல்வர் ரேஸில் சைலண்ட்டாக சாதிக்கும் எடப்பாடி பழனிசாமி! 2026 இல் தேர்தல் களம் திமுக Vs அதிமுகதான்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. லயோலா முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு விவரங்கள் நேற்று வெளியாகின.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. முதல்வர் வேட்பாளர் ரேஸில் 2ஆவது இடம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

2ஆவது இடம்தானே, அதில் என்ன சந்தோஷம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது கருத்துக் கணிப்பில் முதல் இடம் பெற்ற ஸ்டாலினுக்கு 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றால் இரண்டாவது இடத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு 73.30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாக்கு வித்தியாசம் எவ்வளவு
இரு தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் 4.63 சதவீதம் வாக்குகள்தான். எனவே தேர்தல் களத்தில் திமுக வெர்சஸ் அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவும் என காலம்காலமாக தேர்தல் முடிவுகள் உணர்த்தி வருகின்றன.
திராவிடக் கட்சிகள்
தமிழகத்தில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் ஆட்சி, அதிகாரத்தை மக்கள் கொடுத்துவிட மாட்டார்கள். அது ஜாதி கட்சியாக இருந்தாலும் சரி, மத ரீதியிலான கட்சியாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு 5 ஆண்டுகளும் திமுகவோ அதிமுகவோ சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்களையே மாற்றி மாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள்.
ரிஸ்க்
"வந்த ராஜாவுக்கு இருந்த ராஜா எவ்வளவோ மேல் " என்ற சொலவடை உள்ளது. அதற்கேற்ப திமுக- அதிமுகவுக்கு மாற்றாக வேறொரு கட்சியை தேர்வு செய்தால் அது ரிஸ்க் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் பொதுவாக தமிழக மக்களிடம் உண்டு.
அதிமுக அமோக வெற்றி
கடந்த 1991- 1996-ஆம் ஆண்டு வரை அதிமுக அமோக வெற்றி பெற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அடுத்து வந்த 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக மீது இருந்த சில கோபதாபத்தால் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அப்போது ஜெயலலிதா ஆட்சி மீது சில விமர்சனங்கள் வந்ததும், 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்ததாலும், இலங்கை பிரச்சினையாலும், வேறு சில வழக்கு விவகாரங்களாலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் மாற்றி யோசித்து அதிமுகவுக்கு வாக்களித்தனர். அந்த 2011 -2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டன.
2016 தேர்தல்
இதனால் அடுத்து நடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகவுக்கே மக்கள் ஆதரவு அளித்தனர். எனினும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நல பாதிப்பால் காலமானார். அதன் பின்னர் அதிமுக ஆட்சியை கலைக்க திமுக பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்தன. ஆனாலும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகளும் ஆட்சியையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து திறம்பட செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்த மக்கள் , அதிமுகவை அதளபாதாளத்திலும் தள்ளிவிடவில்லை.
1991 ஆம் ஆண்டு
எனவே 1991 ஆம் ஆண்டு முதலே ஒரு கட்சி சரியில்லை என்றால் இன்னொரு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்களே தவிர, இவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு வேறொரு புதிய கட்சியை ஆதரிக்க வேண்டும் என நினைக்கவில்லை. இப்போது லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சர்வேயும், மக்கள் திமுகவை விட்டால் அதிமுக என்ற மனநிலையில் இருப்பதாகவே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications