'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது" என மொபைலுக்கு வரும் இந்த மெசேஜ், இப்போது ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளைத் தூக்கமில்லாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கைக்கு வராமலேயே வந்ததாகக் கணக்குக் காட்டும் 'கோஸ்ட் டெலிவரி' (Ghost Delivery) எனும் மோசடி இப்போது நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக வளைகுடா போர் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. போர் முடிவுக்கு வந்தாலும் கூட உடனடியாக கேஸ் மற்றும் கச்சா எண்ணெய் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடாது. இது முடிவுக்கு வர பல வாரங்கள் வரை ஆகும். இந்த கேஸ் சிக்கலைப் பயன்படுத்திப் பல மோசடிகளும் கூட அரங்கேறி வருகிறது. அப்படி தான் போலி கேஸ் டெலிவரி மோசடி நடக்கிறது.

LPG Ghost Delivery Scam

டெலிவரி ஓவர்

அப்படி தான் தெற்கு டெல்லியின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 72 வயது மூதாட்டி ஒருவருக்கு மார்ச் 23ம் தேதி இப்படியொரு மெசேஜ் வந்துள்ளது.. அவர் சிலிண்டரே புக் கூட செய்யாத நிலையில், "டெலிவரி முடிந்தது" என வந்த செய்தி அவரை உறைய வைத்தது. மெசேஜ்ஜை பார்த்து ஏன் பதற வேண்டும் என நீங்கள் கேட்கலாம்..

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அதற்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசின் விதிகளின்படி, ஒரு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த சிலிண்டரைப் புக் செய்ய முடியும். அந்த மூதாட்டிக்கு மார்ச் 14-ல் ஒரு சிலிண்டர் வந்திருந்தது. ஆனால், மார்ச் 23-ல் யாரோ ரகசியமாக அவர் பெயரில் சிலிண்டர் புக் செய்து, டெலிவரி ஆனதாகக் கணக்குக் காட்டிவிட்டனர். இப்போது அந்தப் பாட்டி நிஜமாகவே சிலிண்டர் தீர்ந்து தவிக்கும்போது, ஆட்டோமேட்டட் சிஸ்டம் அவரைப் புக் செய்ய விடாமல் தடுக்கிறது. எவ்வளவு முறை முயன்றாலும் 25 நாட்களுக்குக் காத்திருங்கள் என மட்டுமே பதில் வருகிறது.

எல்பிஜி வரத்து குறைவு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எல்.பி.ஜி வரத்து குறைந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கேஸ் ஏஜென்சிகளும் விநியோகஸ்தர்களும் ஒரு நிழல் உலக சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளனர். இதற்கு சில காரணங்களும் கூட இருக்கவே செய்கிறது. அதாவது வீட்டு உபயோக சிலிண்டரின் அதிகாரப்பூர்வ விலை என்னவோ ரூ.914 தான்.. ஆனால், இதுவே கருப்புச் சந்தையில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறதாம்.

இவ்வளவு கொடுத்து யார் வாங்குவார்கள் எனக் கேட்கலாம்.. சாலையோர உணவகங்கள், சிறு ஹோட்டல்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாத இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் பிளாக் மார்கெட்டில் இந்த கேஸை வாங்குகிறார்கள். ஒரு சிலிண்டரை முறையாக டெலிவரி செய்தால் ஏஜென்ட்டுக்குக் கிடைக்கும் கமிஷனை விட, பிளாக் மார்கெட்டில் விற்றால் ரூ.4,000 கூடுதல் லாபம் கிடைக்கிறது. இந்தப் பேராசை தான் மோசடிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.!

ஓடிபி தேவை

சிலிண்டர் டெலிவரி ஆகும்போது வாடிக்கையாளர் மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை சொன்னால் தான் டெலிவரி முழுமையடையும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளைக் காரணமாகச் சொல்லி நவீனமாக இந்த முறைகேடுகளைச் செய்து வருகிறார்கள்.

ஒரு லாரியில் 360 சிலிண்டர்கள் வருகின்றன என்றால், அந்த 360ம் 'டெலிவரி ஆகிவிட்டது' என கம்யூட்டரில் பதிவானால்தான் அடுத்த லாரிக்கான அனுமதி கிடைக்கும். இதற்காக, யாருக்குத் தேவை அதிகமோ அல்லது யார் அடிக்கடி புக் செய்யமாட்டார்களோ அவர்களின் பெயரில் போலியாகப் புக் செய்து, அந்தச் சிலிண்டர்களைக் பிளாக் மார்கெட்டிற்கு திருப்பி விடுகின்றனர்.

விசாரணை

இந்த மோசடி புகார்கள் சமூக வலைத்தளங்களில் குவியத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.. ஏப்ரல் 10ம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோசடியில் ஈடுபடும் ஏஜென்சிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்திற்கு முன்பும் இந்த கேஸ் திருட்டு நடந்துள்ளது. ஆனால், அப்போது அமைதியாக நடந்த இந்த 'கேஸ்' திருட்டு, இந்த நெருக்கடியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழை எளியவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரக்கூடாது என்றால் அரசு இரும்புக்கரம் கொண்டு இதை அடக்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+