எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஆயில் நிறுவனங்கள்..3க்கு மட்டுமே முன்னுரிமை! ஹோட்டல்காரங்களுக்கு ஆப்பு!
சென்னை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோகத்திற்கும் அத்தியாவசிய துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறிப்பாக வீடு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு சிலிண்டர் டெலிவரியில் முன்னுரிமை அளிக்கப்படுமென எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்த சூழலில் வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிலிண்டர் விநியோகம்
அதன்படி, சில இடங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் கவலை தெரிவித்திருந்தன.
எண்ணெய் நிறுவனங்கள்
இந்த நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் , பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து கூட்டாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிவிப்பில், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் உருவாகியுள்ளதால், எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு முதன்மை முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம்
மேலும், வீட்டு பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட அத்தியாவசிய துறைகளான மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் எரிவாயு விநியோகம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் எரிவாயு விநியோகத்தை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய துறை
மற்ற அத்தியாவசிய துறைகளின் கோரிக்கைகள் தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற துறைகளிலிருந்து வரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களின் தேவைகள், தகுதி மற்றும் கையிருப்பு நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எரிவாயு விநியோகத்தை வழங்குவது குறித்து முடிவு செய்யும்.
எரிவாயு விநியோகம்
மேலும், தேவையுள்ள நிறுவனங்கள் இந்த குழுவிற்கு மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கைகளை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு தேவையான இடங்களில் எரிவாயு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு சூழலில் முதன்மையாக வீட்டு பயன்பாட்டுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications