உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படும் துரை தயாநிதி? உதவிகளை செய்ய போவது யார் தெரியுமா?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் மு.க.அழகிரி. இவருடைய மகன் துரை தயாநிதி. இவர் பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் இருந்த போது திடீரென கீழே விழுந்து உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர்.
அங்கு 3 மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் இருமுறை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். அது போல் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி பூரண குணமடைந்ததால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் துரை தயாநிதிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகளில் அவருடைய குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாத காரணத்தால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் இருக்கும் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துரை தயாநிதி, சென்னை அப்பல்லோ, வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனையில் 294 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்கிறார் என்ற தகவல் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சிஎம்சி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதியை படமெடுக்க செய்தியாளர்கள் முற்பட்ட போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் செய்தியாளரை தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.
மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் நெப்போலியன். 2014 ஆம் ஆண்டு திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பிரச்சினையில் கருணாநிதி, அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார். மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து நெப்போலியனும் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications