அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த மாவட்டச் செயலாளர் அதிக தொகுதிகளில் வெற்றியை கொடுக்கிறாரோ அவருக்கே அமைச்சர் பதவி, சீனியாரிட்டி எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என முதல்வர் ஸ்டாலின் , மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 39 நாட்கள்தான் இருக்கின்றன. களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது.
200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். குழப்பம் விளைவிப்போரின் சதியை முறியடித்து பலமான கூட்டணியை அமைத்துள்ளோம். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்றுங்கள்.
அதிக வெற்றிகளை பெற்றுத் தரும் மாவட்டச் செயலாளர்களுக்கே அமைச்சர் பதவி. சீனியாரிட்டி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கின்றன. எங்காவது பணியாற்றாவிட்டால் தலைவருக்கு தெரியவா போகிறது என நினைக்காதீர்கள். அத்தனை தொகுதியையும் கண்காணிக்கிறேன். எனக்கு தகவல் வந்துவிடும்.
எம்பியாக வெற்றி பெற்றவர்களும் வேட்பாளரின் வெற்றிக்கு உதவ வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளாராம். அது போல் தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஒரு கையேடும் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டதாம்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்றது.
வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதால் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பாகுபாடு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டதாம்.
இந்த நிலையில் நாளை முதல் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அது போல் திமுகவின் கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் வந்துவிட்டதால் திமுகவில் இனி வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications