அசைன்மென்ட் தந்த ஸ்டாலின்.. இங்கே அண்ணாமலை.. அங்கே உதயநிதி.. நடுவில் எடப்பாடியும் வராரு.. போச்சே
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்காக அடுத்தடுத்து கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், பாஜகவும் கூட தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஒருபக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் திமுக சார்பாக சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்தார். தமிழை - தமிழினத்தை - தமிழ்நாட்டு மக்களை - இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது.

திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன்.வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!, என்று கூட்டத்தில் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக வாக்குசாவடி பணியாளர்களுக்கு, முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி முதலில் உங்கள் பகுதியில் வாக்குசாவடி முகாம் நமக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அது இல்லையென்றால் உடனே அமைக்க வேண்டும். அதில் வாக்காளர்கள் பட்டியலை சரி செய்து லிஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தலுக்கு முன் அல்ல.. இப்போதே வாக்குசாவடி வாரியாக அந்த லிஸ்டில் உள்ளவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் நம்முடைய சாதனைகளை சொல்லுங்கள். நாம் கொண்டு வந்த திட்டங்களை சொல்லுங்கள்.
அதன்பின் மூன்றாவதாக அவர்கள் தேர்தல் சமயத்தில் வாக்களிக்க வருவதை உறுதி செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு 3 முக்கியமான டாஸ்க்குகளை கொடுத்துள்ளார்.
அண்ணாமலை: ஒரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் அண்ணாமலை இன்னொரு பக்கம் நடைபயணம் மேற்கொள்ள களமிறங்கி உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் விதமாக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரத்தில் விழா நடக்க உள்ளது. ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை.
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியதுபி போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவக்க உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
எடப்பாடி கூட்டம்: இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரம்மாண்ட மாநாட்டை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த போது எடப்பாடி மதுரையில் இருந்தார். மதுரை வந்தாலே எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று இந்த தீர்ப்பின் போது அவர் கூறினார். அதோடு முத்துராமலிங்க தேவர் பெயரையும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இன்னொரு பக்கம் பாஜகவின் டெல்லி தலைமையுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை அவர் இந்த கூட்டத்தில் நிரூபிக்க உள்ளாராம். அதன்படி எடப்பாடி பழனிசாமி சார்பாக மதுரையில் நடக்க உள்ள அதிமுக கூட்டத்திற்காக முக்கியமான சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.
உதயநிதி ஸ்டாலின்: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக மாபெரும் மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 2007ல் முதல்வர் ஸ்டாலின்.. அப்போதைய திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்தார். இளைஞரணி வெள்ளிவிழா மாநாட்டை பிரம்மாண்டமாக ஸ்டாலின் நடத்தினார். அதேபோல் பிரம்மாண்டமாக திமுக சார்பாக அதன்பின் இளைஞரணி மாநாடு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில்தான் அதேபோல் பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டை உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இடம் தேர்வு செய்ய பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கிறதாம். அதாவது கொங்கு மண்டலமா, மத்திய தமிழ்நாட்டிலா எங்கு மாநாட்டை நடத்துவது என்று ஆலோசனை செய்யப்பட்டதாம்.
கடைசியில் கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். இதில் கோவை, தருமபுரி, நாமக்கல் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் சேலம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாம். அதன்படி வரும் நவம்பர் இறுதியில் சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் இளைஞரணி மாநாடு நடத்தப்படும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications