தேசியக் கொடி ஏற்றும் உரிமை: முதலமைச்சர்களுக்குப் பெற்றுக் கொடுத்த கருணாநிதி! - போராட்டப் பின்னணி
சென்னை: சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
Recommended Video
'கொடி ஏற்றுவதில் என்ன இருக்கிறது.. ஆளுநர் ஏற்றினால் என்ன.. ஆளும் முதலமைச்சர் ஏற்றினால் என்ன.. இது ஏன் அவ்வளவு முக்கியம்?' என்ற கேள்வி எழுகிறதா? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்றுக்கொடுத்த இந்த உரிமைக்கு பின்னால் மிகப்பெரிய சுயாட்சித் தத்துவம் இருக்கிறது. நாட்டின் இதர மாநிலங்கள் மிகத் தாமதமாக உணர்ந்த சுயாட்சி தத்துவம் அது.
2022 ஆம் ஆண்டில்கூட இந்தியா முழுக்க உள்ள பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் சுயாட்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சூழலில், 1974 ஆம் ஆண்டிலேயே அதற்காகக் குரல் கொடுத்தவர் கருணாநிதி.
நாடு தனது 75 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் இந்தநேரத்தில்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்தது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

தனித்து நின்ற தமிழ்நாடு
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 30 ஆண்டுகளில் மதரீதியான மோதல்களை வட மாநிலங்கள் சந்தித்து வந்தன. ஆங்காங்கே இந்து-இஸ்லாமிய மத மோதல்கள் தலைதூக்கின. விந்திய மலைக்கு வடக்கே இருக்கும் மாநிலங்கள் எல்லாம் மதத்தில் கட்டுண்டு கிடந்தன.
ஆனால், தெற்கே தமிழ்நாடு மட்டும் இதுபோன்ற விஷமத்தனமான மோதல்களில் சிக்காமல் தனித்து நின்றது. தனக்கான பல கனவுகளைச் சுமந்து கொண்டு தமிழ்நாடு வளர்ந்தது. எளிய மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மீதும் சமூகநீதித் திட்டங்களின் மீதும் தனிக்கவனம் செலுத்தி தனக்கான பாதையை தமிழ்நாடு வகுத்துக் கொண்டது.
இப்படி தனித்துப் பயணம் செய்த தமிழ்நாடு தேசிய அளவில் வைத்த முக்கியமான கோரிக்கைதான் மாநில சுயாட்சி. ஆங்கிலேயர்கள் இருந்தபோது அதிகாரம் என்பது ஓர் இடத்தில் மட்டும் குவிந்திருந்தது. ஆனால், 'சுதந்திரத்துக்குப் பின்பும் டெல்லியில் மட்டுமே அதிகாரங்கள் குவிவது எந்தவிதத்தில் நியாயம்?' என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
'ஆளுநர் பதவியே தேவையில்லாத பதவி' என்றும் விமர்சித்தார். அப்போது டெல்லியின் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். அதை வடஇந்திய மாநிலங்களும் இதர தென்னிந்திய மாநிலங்களும் புரிந்துகொள்ளவே இல்லை. 75 ஆண்டுகள் கடந்த பின்னர்தான், 'மாநில சுயாட்சி ஏன் முக்கியம்?' என்பதை அந்த மாநிலங்கள் உணரத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு விதை போட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

கொடியேற்றும் உரிமை
அந்த வரிசையில், மாநில முதலமைச்சர்களுக்கு கருணாநிதி பெற்றுக்கொடுத்த உரிமைதான் சுதந்திர தினம் அன்று, 'கொடி ஏற்றும் உரிமை'. இது ஏன் மிக முக்கியமான உரிமையாகப் பார்க்கப்படுகிறது?
'சுதந்திர தினத்தன்று மாநிலத் தலைநகரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் கொடி ஏற்றாமல், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மாநிலத்துக்குத் தொடர்பே இல்லாத ஆளுநர் கொடியேற்றுவது ஜனநாயகரீதியாக நன்றாகவா இருக்கும்?'
மேலும், ' பல கோடி மக்கள் வாக்களித்து தேர்வு செய்த மாநில முதலமைச்சர் கொடி ஏற்றுவதுதானே முறையாக இருக்கும்' என்ற நோக்கில் சிந்தித்து அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
'மாநிலத்தில் ஆளுநர் என்பவர் பெரியவர் அல்ல, முதலமைச்சர்தான் பெரியவர், அவருக்கே கொடி ஏற்றும் உரிமை இருக்கிறது' என்பதையும் கருணாநிதி நிலைநாட்டினார். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதற்குப்பின் இருக்கும் அரசியலை புரிந்துகொள்ளும் முன்பே, இந்த உரிமையைப் பெறுவதற்காக பெரும் போராட்டத்திலும் அவர் இறங்கினார்.

கருணாநிதி முன்வைத்த கோரிக்கை
மாநில சுயாட்சிக்காக, முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், 1974 ஆம் ஆண்டு குடியரசு தினம் வந்தது. அப்போது ஆளுநராக இருந்த கே.கே.ஷா என்றழைக்கப்பட்ட கேதர்தாஸ் காளிதாஸ் ஷா, புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கொடியை ஏற்றுவதை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் அருகில் நின்று பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொடியேற்றும் உரிமை கிடைக்காத கோபமும் போராட்டக் குணமும் கருணாநிதியின் கண்களில் தெறித்தது.
'அடுத்தமுறை இங்கு கொடி ஏற்றப்பட்டால் அதை ஏற்றுவது முதலமைச்சரின் கைகளாகவே இருக்கும்' என்ற முடிவையும் அப்போது அவர் எடுத்தார். இதுகுறித்து அன்றைய பிரதமர் இந்திராகாந்தியிடம் உடனே கோரிக்கை வைத்தார்.
இதற்காக கருணாநிதி முன்வைத்த வாதங்கள் மிக முக்கியமானவை. அவர் பேசும்போது, 'குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது பிரதமர்தானே செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் இல்லையே? ஏனென்றால் பிரதமர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். பிரதமருக்கு கிடைக்கும் இந்த உரிமை, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் கிடைப்பது இல்லை' எனக் கேள்வியெழுப்பினார்.
எந்த மாநிலமும் யோசிக்காத கோணம் இது. இந்த வாதத்தைக் கேட்டதும் இந்திரா காந்தியும் மனம் மாறத் தொடங்கினார். 'கலைஞர் சொல்வதும் சரிதானே.. ஆளுநர் ஏன் கொடியேற்ற வேண்டும்?' என இந்திராவும் யோசிக்கத் தொடங்கினார்.

கருணாநிதி காட்டிய உறுதி
கருணாநிதியிடம் எப்போதுமே ஒரு குணம் இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அதில் இருந்து பின்வாங்க மாட்டார். கொடியேற்றும் விவகாரத்திலும் அப்படித்தான். இந்திராகாந்தியிடம் கோரிக்கை வைத்ததோடு நிற்காமல் தொடர்ந்து இதைப் பற்றி அறிக்கைகளை வெளியிட்டார்.
முரசொலி நாளேட்டில் இதைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். 'மாநில தலைநகரங்களில் மாநில முதலமைச்சர்கள் ஏன் கொடியேற்ற வேண்டும்?' என்று மிக நீண்ட புகார் கடிதம் ஒன்றையும் பிரதமர் இந்திரா காந்திக்கு அப்போது அனுப்பினார்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, 'மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும். எங்களுக்கென்று தனிக்கொடி வேண்டும்' என்றும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி முழக்கம் எழுப்பினார்.
இதன் நீட்சியாக, மாநில அரசின் உரிமைகளை ஆராய ராஜமன்னார் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மாநில சுயாட்சியின் தேவை குறித்து, மொத்த தேசத்துக்கும் கருணாநிதி பாடம் எடுத்தார்.

செவிசாய்த்த இந்திராகாந்தி
1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் கருணாநிதி வைத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் இந்திரா காந்தி, கொடியேற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதே வருடம் நாடு முழுக்க மாநில முதலமைச்சர்கள்தான் தலைநகரங்களில் கொடியேற்றினர்.
தமிழ்நாட்டில் முதல் ஆளாக புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் கருணாநிதி கொடியேற்றினார். எப்போது அமைதியின் உருவமாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, அன்று போர் முடிந்து வெற்றிமுரசு கொட்டும் களம்போல கம்பீரமாகக் காட்சி அளித்தது.
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு முதலமைச்சர் கருணாநிதி நடந்து வந்த காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது எந்தத் திரைப்படங்களிலும் வராத 'மாஸ் சீன்' என்றுதான் கூற வேண்டும்.
மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கம்பீரமாக கொடியேற்றும்போது, அவர்கள் சல்யூட் அடிப்பது தேசியக் கொடிக்கு மட்டுமல்ல, அந்த உரிமையைப் பெற்றுத் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் சேர்த்துதான்.
'சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், மக்கள் அனைவரும் அவரவர் சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பில் இந்திய தேசியக் கொடியை வைக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பல பிரபலங்கள் தங்களது டிபி-யில் தேசியக் கொடி வைத்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சுதந்திர தினத்தின்போது பெருமிதத்தோடு தேசியக் கொடியை ஏற்றிய அந்தக் காட்சியைத்தான் முகப்பில் வைத்துள்ளார்.
இதன்மூலம், 'சுதந்திரம் தொடர்பான கருத்திலும் மாநில சுயாட்சியைப் பற்றியே நாங்கள் பேசுவோம்' என்பதை அவர் சொல்லாமலேயே உணர்த்தியுள்ளதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications