“திராவிட மாடல் ஆட்சியேதான் வேண்டும்” - ஆதினங்கள் புகழ் மழையில் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி, அமைச்சர் சேகர்பாபு விதவிதமான கோணங்களில் விழா எடுத்துக் கொண்டாடி வருகிறார். கடந்தவாரம் ஸ்டாலின் குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினார்.

இந்தவாரம் 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்' என்ற விழாவை 'அன்பே ஆன்மீகம் அதுவே தமிழ்ஞானம்' தலைப்பில் நடத்தினார். அது சென்னை பி.கே.என் மகாலில் நடைபெற்றது. அந்த ஆன்மீக அரங்கத்தைத் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

அவ்விழாவில், திருவாவடுதுறை ஆதினம், குமரகுருபர அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், அம்பலவாண தேசிகர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சடகோப ராமானுஜர் எனப் பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஒருமித்த குரலில் அனைவரும் 'திராவிட மாடல் அரசின் மக்கள் பணிகள் தொடர வேண்டும்' என்றனர்.

ராஜராஜன் ஆட்சியில் நடந்த பசுக்கதை

ராஜராஜன் ஆட்சியில் நடந்த பசுக்கதை

மேலும் பல உணர்ச்சிகரமான வரலாற்று தகவல்களைக் கூறி, கூட்டத்தினரை மெய்மறக்க வைத்தனர். அவ்விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், "நம் எல்லோர் இதயத்திலும் அமர்ந்த கோயில் தஞ்சை பெரிய கோயில். கல் எல்லாம் பேசும் பொற்சிலைகள்.

மண் எல்லாம் விண் முட்டுகிற கோபுரங்கள். வண்ணங்கள் எல்லாம் உயிர்ப்புடைய ஓவியங்கள். அந்தத் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றின் பேரதிசயம். அந்த ஆயிரம் ஆண்டுக்கால அதிசயத்திற்குப் பெருவிழா நடத்தினார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.

அந்தக் கோயிலை ராஜராஜன் எழுப்பியபோது தலைமை தச்சனுக்கும் தன்னுடைய மன்னன் பட்டத்தைத் தந்தான். அந்த இறைவன், இறைவிகளின் ஆடைகளைத் தூய்மை செய்கின்ற கடைநிலை ஊழியனுக்கும் தன்னுடைய ராஜராஜன் பட்டத்தைத் தந்தான்.

ஒரு நாள் மன்னன் ராஜராஜன் கோயிலுக்கு வருகிறார். சில இடங்களில் விளக்குகள் எரிந்தன. சில இடங்களில் உள்ள விளக்குகள் அணைந்து கிடந்தன. உடனே, 'ஏன் விளக்குகள் எரியவில்லை?' என அருகிலிருந்த அதிகாரியிடம் விசாரித்தார். அதிகாரி, 'நெய் கொடுப்பவர்கள் தரவில்லை' என்றார்.

உடனே மன்னன் 'யார் தருவார்கள்?' என்றார். 'யார் தருவார்கள், செல்வந்த சீமான்கள் நேர்த்திக் கடனாக நெய் தருவார்கள். அவர்கள் தரவில்லை. ஆகவே விளக்குகள் எரி
யவில்லை' என்றார் அதிகாரி.

ஏழையின் வீடு தேடிப் போன ராஜராஜன்:

ஏழையின் வீடு தேடிப் போன ராஜராஜன்:

அடுத்து மன்னன் ராஜராஜன் சொன்னான், இனிமேல் அவர்களிடம் நெய் வாங்க வேண்டாம்' என்றார். 'வாங்கவில்லை என்றால், எப்படி விளக்குகளை எரிப்பது?' எனப் பணிந்தார் அதிகாரி.

'இனி அவர்களிடம் நெய்க்குப் பதிலாகப் பசுக்களைத் தானமாகப் பெறுங்கள். அந்தப் பசுக்களை எல்லாம் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுங்கள். அவர்கள் கோயில் விளக்குகளுக்கு நெய் மட்டும் தரட்டும்' என்றார். ஒரே நேரத்தில் கோயில் விளக்குகளும் எரியவேண்டும், குடிசைகளில் அடுப்புகளும் எரிய வேண்டும் எனத் திட்டம் வகுத்தான் மன்னன் ராஜராஜன்.

திருக்கோயில் வளாகத்திற்குப் பசுக்கள் வருகின்றன. உழவர்கள் வந்து பெற்றுச் செல்கிறார்கள். அந்தக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதன்பின்னர் கோயிலே பிரகாசமாக மாறிவிட்டது. ராஜராஜனின் இதயமும் பிரகாசமாக மாறிவிட்டது.

ஒருநாள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மன்னர், பெருவுடையார் கோயிலுக்கு வருகிறார். மாடத்தில் சில விளக்குகள் அணைந்திருந்தன. 'ஏன் இங்கு விளக்குகள் அணைந்துள்ளன?' என்கிறார். 'இந்த விளக்குக்கு நெய் தரவேண்டியவர் தரவில்லை' என்கிறார் கோயில் நிர்வாகி.

உடனே கணக்கை எடு என்கிறார் மன்னன். கணக்கைப் பார்த்தால், மாராயன் என்பவன் பெயர் வருகிறது. எவ்வளவு பசுக்களை வாங்கி இருக்கிறான் என்று பார்க்கிறார்கள். 42 மாடுகளை வாங்கிக் கொண்டு போய் இருக்கிறான். மன்னன் யோசித்துவிட்டு, 'எவ்வளவு நாள்களாக நெய் தரவில்லை' எனப் பார்க்கச் சொல்கிறார். கணக்கைப் பார்த்தால் ஒருவாரம் தரவில்லை. உடனே படையோடு ராஜராஜனே அவனது வீட்டுக்குப் போனார்.

சோழக் கல்வெட்டில் ஏழையின் மனைவி பெயர்:

சோழக் கல்வெட்டில் ஏழையின் மனைவி பெயர்:

வெளியே நின்றபடி, 'மாராயா வெளியே வா' என்று ராஜராஜன் அழைக்கிறார். அவன் வரவில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் அவனது மனைவி கலங்கிய கண்களுடன், தோளில் தன் சவளைக் குழந்தையைச் சுமந்தபடி வெளியே வந்தவள், ராஜராஜனின் கால்களில் மயங்கி விழுகிறாள்.

'எங்கே உன் கணவன்' என்று கேட்டார் மன்னன். அவள், 'என் கணவனும் நீங்கள் கொடுத்த 42 பசுக்களும் காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டன" என்கிறார். உண்மைதானா எனக் கேட்டபடி ஊர் மக்களைத் திரும்பிப் பார்த்தார் மன்னன். மக்களும் ஆமாம் என்று தலையசைத்தனர்.

மீண்டும், 'இந்தச் சம்பவம் நடந்து எத்தனை நாள்கள் ஆகின்றன?' என்கிறான். ஒரு மாதம் கடந்துவிட்டது என்கிறாள் அவள். 'ஒரு மாதம் ஆன பிறகும் நீ மூன்று வாரங்கள் வரை நெய் கொடுத்திருக்கிறாய்? ஏன் ஒரு வாரம் மட்டும் தரவில்லை' என மறுபடியும் மன்னன் வினவினான்.

அவளோ, 'என் குழந்தைக்குத் தர வேண்டிய தாய்ப்பாலை விற்றுத்தான் இந்த மூன்று வாரங்கள் நெய் கொடுத்தேன். கடந்த ஒரு வாரமாக என் தாய்ப் பால் வற்றிவிட்டது' எனக் கூறிவிட்டு மயங்கி விழுந்தாள்.

உடனே மன்னன் சொன்னான், 'இவளது பெயரை என் பெயரோடு சேர்த்து கல்வெட்டில் பொறிக்கச் செய்யுங்கள். மீண்டும் 42 பசுக்களை வழங்குங்கள். அந்தப் பசுக்களை ராஜராஜனே பராமரிப்பான்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். கோயிலைத் தழுவிய குடிமக்கள், குடி
களைத் தழுவிய கோயில் என்ற நிலைப்பாட்டை நிறுவினான் ராஜராஜன்.

ஸ்டாலின் அள்ளி வழங்கிய 50 கோடி:

ஸ்டாலின் அள்ளி வழங்கிய 50 கோடி:

இதைத்தான் கடந்த இரண்டு மாதங்கள் முன்னதாக தமிழ்நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள 2 ஆயிரம் கோயில்களுக்கு ஏறத்தாழ 50 கோடியை வாரி வழங்கினார் மனிதநேய மக்கள் முதல்வர் ஸ்டாலின்.

பெருவுடையார் கோயிலில் எரித்த விளக்கைப் போல கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களிலும் விளக்குகள் எரிக்கப்பட்ட வேண்டும், குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற வேண்டும் என்ற மகத்தான ஆன்மிக திருப்பணியை அறநிலையத்துறை மூலம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்.

பல முறை நான் கோபாலபுரம் வீட்டுக்குப் போய் மு.கருணாநிதியைச் சந்தித்திருக்கிறேன். அப்படி ஒருமுறை சென்ற போது வீடே பரபரப்பாக இருந்தது. கலைஞர் கேட்டார், 'அவசர வேலை ஏதேனும் இருக்கிறதா? கொஞ்சம் நேரம் இருக்கலாமா?' என்றார். நான் சம்மதித்தேன்.

அன்றுதான் கோபாலபுர வீட்டை மருத்துவமனையாக மக்களுக்கு எழுதிவைத்தார் மு.கருணாநிதி. அங்கே அதற்கான பத்திரப்பதிவும் நடந்தது. சாட்சியாக எங்களையும் கையெழுத்துப் போடச் சொன்னார். வியந்து போனோம். நெகிழ்ந்து போனோம்" என்று பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொன்னார்.

குமரகுருபர அடிகளார், "எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் சொல்லாக இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பள்ளியைத் தொடங்கினார். அதற்காக அனைத்து ஆதினங்களையும் அழைத்து அதற்கான விவரங்களைக் கேட்டறிந்தார்" என்றார்

திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிகர், "நம் திருவாவடுதுறை ஆதினம் நிறையத் தமிழ் சேவையைச் செய்து வருகிறது. வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றவர்கள் நமது ஆதினத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தான். இப்படி பாரம்பரிய மிக்க ஆதினம் என்ற பெருமை நமக்கு உண்டு" என்றவர் இந்த ஆட்சி குறித்து சில கருத்துகளை முன்வைத்தார்.

ஓடாத தேர்.. திமுக ஆட்சியில் ஓடிய கதை:

ஓடாத தேர்.. திமுக ஆட்சியில் ஓடிய கதை:

தொடர்ந்து அவர், "இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எல்லாம் செய்துகொண்டு வருகிறார். காலை சிற்றுண்டித் திட்டம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. தாய்மார்களுக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் எல்லாம் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது. தானத்திலே சிறந்த தானம் அன்னதானம். அதுதான் இந்த உயிரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

அதை நம் முதல்வர் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல நல்ல திட்டங்களைத் திருக்கோயில்களில் செய்துவருகிறார்" என்றார்

அடுத்ததாக, போரூர் ஆதினமான சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேச வந்தார். அவர், "பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து வரும் முதல்வர் ஸ்டாலின், சொல்லிலே மட்டும் நான் சிறப்புடையவன் இல்லை; செயலிலும் சிறப்புடையவன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

தொடரட்டும் திராவிட மாடல் ஆட்சி

தொடரட்டும் திராவிட மாடல் ஆட்சி

அவர் ஒரு நல்ல செயல்பாட்டு முதல்வர். திருவாரூரில் ஓடாது நின்ற தேரை இவரது தந்தையார் கலைஞர் திரும்ப ஓட்டினார். அதைப் போலத் தமிழ்நாட்டில் ஓடாமல் நின்று கொண்டிருந்த பல்வேறு துறைகளை எல்லாம் முடுக்கு ஓட வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்" என்றார்

இவரைத் தொடர்ந்து மயிலம் பொம்புர ஆதினமான சிவஞான பாலய சுவாமிகள், "எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கின்றார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்

இறுதியாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்லாண்டு வாழவேண்டும். அப்போதும் இதைப்போன்ற பல நல்ல மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். இன்றைக்குப் பல மாற்றங்களை அவர் கொண்டுவந்திருக்கிறார்.

இதே ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறோம்" என்றார். அப்போது அரங்கமே அதிரும் அளவுக்குக் கைத்தட்டல் எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+