'மத யானைக் கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி
சென்னை: இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார். மதயானைக்கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் காலமானார். ஆடுகளம் திரைப்படத்தில் எழுத்தாளராகவும், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விக்ரம் சுகுமாரன். மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார். விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொல்லாதவன் படத்தில் நடிகராக
மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறிய போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி விக்ரம் சுகுமாரன் காலமானார். சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள விக்ரம் சுகுமாரனின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை உதவியாளராக பணிபுரிந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படத்திலும் விக்ரம் சுகுமாரன் நடித்துள்ளார்.
ஆடுகளம் படத்தில் வசனம்
'ஆடுகளம்' படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் எழுதினார். விக்ரம் சுகுமாரன் முதலில் இயக்கிய 'மதயானைக் கூட்டம்'. நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதிர், ஓவியா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது, கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து 'இராவண கோட்டம்' படத்தை இயக்கினார். இந்த படத்தில் சாந்தனு, ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை கதை களமாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது. பிரபு, இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இதை தொடர்ந்து ஏறுதழுவலை மையமாக கொண்ட 'தேரும் போரும்' என்ற படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்தார்.
சாந்தனுவுடன் ராவண கோட்டம்
நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தளத்தில் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு வேதனை தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அமைதியாக உறங்குகள் சகோதரா. உங்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சீக்கிரமாகவே விடை பெற்று விட்டீர்கள். உங்களை ரொம்பவே மிஸ் செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார். விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications