சென்னை மாநகராட்சியில் இணைந்த மடிப்பாக்கத்தின் 13 வருட கனவு நிறைவேறியது.. மக்கள் ஹேப்பி
சென்னை: மடிப்பாக்கம், சென்னை மாநகராட்சியில் இணைந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் மடிப்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளும், குடிநீர் குழாய் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரம் முதல்முறையாக அங்கு புதிய குடிநீர் குழாயில் தண்ணீர் வந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்ட சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகள் சென்னை நகருடன் இணைத்து சென்னை மாநகராட்சி பகுதிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட நெற்குன்றம், மடிப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் பணிகள் பலஆண்டுகளாக நடந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் குடிநீர் வினியோகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட நெற்குன்றம், மடிப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், மாதவரம் பகுதிகளில் உள்ள 7.9 லட்சம் குடும்பங்களுக்கு 61.42 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரகிறது. இதற்கான திட்டப்பணிகள் ரூ.428.17 கோடி செலவில் கடந்த சில ஆண்டுகளாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. குறிப்பாக கடந்த ஓராண்டில் பணிகள் மிகப்பெரிய அளவில் விறுவிறுப்பாக நடந்தது.
மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பல ஆயிரம் குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி இருந்து வந்தனர். அதேநேரம் மடிப்பாக்கம் பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தண்ணீர் தான் மடிப்பாக்கம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போதைய நிலையில் குடிநீர் ஆதாரமாக நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்த மக்கள் தண்ணீர் வறண்டு போனதால் டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் குடிநீர் பிரச்சனையை மாநகராட்சி தீர்க்க போகிறது.
ஏனெனில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வினியோகம் செய்வதில் கசிவு உள்ளதா என சோதிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பல்வேறு குழாய்களில் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மடிப்பாக்கத்தின் பல்வேறு சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதேநேரம் தற்போது அங்கு பாதாள சாக்கடை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் சாலைகளில் பள்ளம் அதிகமாக இருக்கிறது. அங்கும் தண்ணீர் தேங்குவதால் அவதியும் ஏற்படுகிறது.
எது எப்படியோ கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு குழாய்களில் குடிநீர் கிடைக்க போவது உறுதியாகி உள்ளது. மடிப்பாக்கத்தில் இப்படி என்றால் நீலாங்கரை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் குடிநீர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications