'சகோதரி நகரங்கள்..' அமெரிக்கா முதல் ரஷ்யா வரை.. உலகெங்கும் சிங்கார சென்னைக்கு இப்படி ஒரு கனெக்ட்டா!!
சென்னை: இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னைக்கு உலகெங்கும் இருக்கும் சகோதரி நகரங்கள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.
Recommended Video
தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையின் 382ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1996ஆம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தான் மெட்ராஸ் என்று இருந்த இந்த நகரின் பெயரைச் சென்னை என மாற்றினார்.
அதற்கு முன் கடந்த 16ஆம் நூற்றாண்டிலிருந்தே சுமார் 450 ஆண்டுகளாக மேலாக மெட்ராஸ் என்ற இந்த அழைக்குப்பட்டு வந்தது. மெட்ராஸ் அல்லது சென்னை இதில் எது சரியான பெயர் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்திருந்திருக்கும், அது குறித்து ஒரு சிறிய வரலாற்றைப் பார்த்துவிடலாம்.

சென்னை - மெட்ராஸ்
இப்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் அமைந்துள்ள இடத்தை கடந்த 1639ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் அய்யப்பன் நாயக்கர் என்பவரது தந்தை சென்னப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கினர். அவரது நினைவாகவே கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. மறுபுறம், போர்த்துக்கீசியர்கள், 1500களின் தொடக்கத்திலேயே சாந்தோம் பகுதியில் துறைமுகம் ஒன்றை ஏற்படுத்தி 'மெட்ராஸ்' என்று அழைத்தனர். ஆனால், எதற்காக மெட்ராஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை, இருப்பினும், மெட்ராஸ் என்ற சொல்லே பழக்கப்பட்ட ஒரு சொல்லாக இருந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, 1969இல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. அப்போது தலைநகர் மெட்ராஸின் பெயரைச் சென்னை என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1996ஆம் ஆண்டு சென்னை எனப் பெயரிடப்பட்டது.

சகோதரி நகரங்கள்
அதேநேரம் இந்தியாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று மெட்ராஸ். 1688ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் நகராட்சியாகச் சென்னை தான் அறிவிக்கப்பட்டது. இப்படி எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி நிற்பதாலேயே இந்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்படுகிறது. சரி வரலாறு போதும்.. உலகெங்கும் அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாடுகளிலும் சகோதரி நகரங்கள் உள்ளது தெரியுமா! மெட்ராஸுக்கு உள்ள சகோதரி நகரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன் சகோதரி நகரங்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

சகோதரி நகரங்கள் என்றால் என்ன
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே இந்த சகோதரி நகரங்கள் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே பொருளாதார, கலாசார மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இந்த சகோதரி நகரங்கள் என்ற திட்டத்தை அமெரிக்காவின் 34ஆவது அதிபர் ஐசனோவர் அறிவித்தார். sister city என்றும் twin town என்றும் இவை அழைக்கப்படும். இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அமெரிக்க நாடுகளில் sister city என்ற சொல்லும் ஐரோப்பிய நாடுகளில் twin town என்ற சொல்லும் பயன்படுத்தப்படும்.

முதல் சகோதரி நகர்
இப்படி உலகின் இரு வேறு நாடுகளில் உள்ள நகரங்கள் sister cityஆக அறிவிக்கப்படும்போது, அந்த இரு நகரங்களுக்கு இடையே தொழில்நுட்ப கலாசார பரிமாற்றம் நடக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 90கள் வரையிலும் சோவியத் ரஷ்யாவுடனேயே நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். அதற்கேற்ப தமிழ்நாட்டின் முதல் sister city-க்கான ஒப்பந்தமும் ரஷ்யா உடனேயே போடப்பட்டது. 1966ஆம் ஆண்டு ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரம் சென்னையின் முதல் சகோதரி நகரமானது. முதல் சகோதரி நகரம் என்றால் அப்போது சென்னைக்கு மொத்தம் எத்தனை சகோதரிகள் என்று கேட்கிறாரீர்களா. மொத்தம் 5 சகோதரி நகரங்கள் உள்ளன. இரண்டாவது சகோதரி நகரத்திற்கான ஒப்பந்தம் 1984ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த முறை அமெரிக்க நகருடன் உடன்! அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகருடன் 2ஆவது சகோதரி நகர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சான் அன்டோனியோ நகரம்
அடுத்துக் கடந்த 2008இல் திமுக ஆட்சியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் ஒன்றான டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோ நகருடன் சென்னைக்கு சகோதரி பந்தம் ஏற்பட்டது. இந்த பந்தத்தை நினைவு கூரும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக சான் அன்டோனியோ நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 2014இல் சான் ஆன்டானியோ நட்சத்திர கூடைப்பந்து வீரர் இசையா தாமஸ் சென்னைக்கு வந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, கூடைப்பந்து பயிற்சியும் அளித்தார்.

கூவத்தைச் சுத்தப்படுத்த
இரு நகரங்குக்கும் இடையே இந்த சகோதரி ஒப்பந்தம் போடப்பட்டதற்குத் தமிழர்கள் கணிசமான அளவு இருப்பது மட்டும் காரணமில்லை. சான் அன்டோனி நகரில் நடுவே செல்லும் நதியை அம்மாநகர நிர்வாகம் சுத்தப்படுத்திச் சிறப்பாகப் பாதுகாத்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தைப் பெற்று கூவம் நதியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காகவே இந்த சகோதரி நகரம் ஒப்பந்தம் போடப்பட்டது.

கோலாலம்பூர் நகரம்
அதைத்தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மாநகர மேயராக மா சுப்பிரமணியன் இருந்தபோது நகர் திட்டமிடல் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் மலேசியாவின் கோலாலம்பூருடன் சகோதரி நகர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படவே அப்படியே அது கிடப்பில் போனது.

சீனாவின் சோங்கிங்
அதன் பிறகு அதிமுக ஆட்சியில் கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் சோங்கிங் நகரத்துடன் சகோதரி நகரம் போடப்பட்டது. சீனாவின் சோங்கிங் நகரம் சிறப்பான பொதுப் போக்குவரத்து வசதிக்குப் பெயர்போனது. அந்த தொழில்நுட்பத்தைச் சென்னையில் செயல்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுபோல போடப்படும் ஒப்பந்தங்கள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். சென்னை மட்டுமின்றி நாட்டின் பல முக்கிய நகரங்களும் பல சகோதரி நகரங்களைக் கொண்டுள்ளது. கோவை கூட ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் சகோதரி நகரங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான திட்டம்
அமெரிக்காவின் 34ஆவது அதிபர் ஐசனோவர் முன்னெடுத்த இந்த சகோதரி நகர் திட்டம் மிக அற்புதமான ஒரு திட்டமாகும். இதன் மூலம் உலகின் பல நகரங்களுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் கலாசார பரிமாற்றம் சாதிமானது. ஒரு நகர் சிறப்பான ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தால், அந்த தொழில்நுட்பம் தேவைப்படும் பல்வேறு நகரங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்த திட்டம் அளித்துள்ளது. ஆனால், இதையெல்லாம் நடக்கிறதா என்றால் அதற்கு உறுதியான பதிலைக் கூற முடியவில்லை.

மெட்ராஸ் டே
ஆட்சி மாற்றம், நிதி, நடைமுறை இக்கலைகளைக் களையாமல் விடுவது உள்ளிட்ட பல காரணங்களால் இவை பெரும்பாலுநி ஒப்பந்தங்களாக மட்டுமே உள்ளன, செயல் வடிவத்திற்கு வருவதில்லை. சிக்கல்களைக் களைந்த இந்த ஒப்பந்தங்களை முறையாகச் செயல்படுத்தினால், ஒரு சில ஆண்டுகளில் சான் ஆன்டானியோ தொழில்நுட்பத்துடன் கூவத்தைச் சுத்தப்படுத்தலாம், சோங்கிங் தொழில்நுட்பத்துடன் மூச்சுமுட்டும் சென்னை போக்குவரத்தைக் கட்டுப்படுத்தலாம், கோலாலம்பூர் தொழில்நுட்ப உதவியுடன் தொட்டால் உதிரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பதிலாக வலுவான சிறப்பான நகர்ப்புற கட்டமைப்பை ஏற்படுத்தலாம். மெட்ராஸ் தினத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிங்கார சென்னையை அமைப்பதைத் தவிரச் சென்னைவாசிகளுக்கு வேறு என்ன கனவு இருக்க முடியும்..!












Click it and Unblock the Notifications