சென்னை பார் கவுன்சில் ஆபீஸில் சான்றிதழால் சிக்கிய மதுரை கவிதா, சேலம் கிருஷ்ணமூர்த்தி.. பின்னணி
சென்னை: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார்கவுன்சிலில் 2020-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முயன்றதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் புகார் அளித்தார்.இதன்பேரில் 2 போலி வழக்கறிஞர்களை போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டுமானால், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் சிலர் போலியான பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து பட்டம் பெறுகிறார்கள். சிலர் போலியாக சான்றிதழ்களை தந்து வழக்கறிஞராக பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள்.. அப்படி செய்பவர்கள் சான்றிதழ் சோதனையில் சிக்கி கைதாகிறார்கள். சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னை மாநகர காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "ஜூன் 13ம் தேதியான நேற்று சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் (B-4 ), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறுகையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார்கவுன்சிலில் 2020-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்ததை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022ல் இந்திய பார்கவுன்சிலில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்திய பார்கவுன்சில் மேற்படி நபர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை குறித்து கடிதம் மூலம் கேட்டது. அதன் பேரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவலர்கள் மேற்படி விண்ணப்பதாரர்கள் புதுடெல்லியில் உள்ள GLOCAL பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை கண்டறிய கடிதம் மூலம் பெற்ற அறிக்கையின் படி இருவரின் கல்வி சான்றிதழ்கள் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே பார்வுகவுன்சில் அலுவலகத்துக்கு போலி ஆவணங்களுடன் வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்பேரில் சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா (42) மற்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (57) ஆகியோரை வெள்ளிக்கிழமை பார்கவுன்சில் அலுவலகத்தில் (ஆஜராக வந்த போது) வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (ஜூன் 14) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட (நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள்) உள்ளனர்" இவ்வாறு காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications