தோண்டத் தோண்ட பிரிட்டிஷ் இந்தியாவின் ரகசிய ஆவணங்கள்! சென்னையில் இப்படி ஒரு இடமா?
சென்னை: 1909இல் தொடங்கி இன்றுவரை சென்னையின் அடையாளமாக இருந்து வரும் ஆவணக்காப்பகம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது மெட்ராஸ் நகரத்தில் ஏற்பட்ட பதற்றம் எப்படி பற்றி எரிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
சென்னை மாநகரம் உருவான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதியை 'மெட்ராஸ் டே' எனக் கொண்டாடி வருகிறோம். இந்த நகரம் உருவாகி 385 ஆண்டுகள் ஆகிறது. அதாவது 1639இல் உருவான இந்த சென்னை இன்று வியக்க வைக்கும் நகரமாக விளங்கிவருகின்றது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் எனப் பல படைகளைப் பார்த்த இந்த நகரம் இந்தியாவிலேயே மிகப் பழமையான நகரம். மெட்ராஸ் பிரசிடென்சி என்பது பல மாநிலங்களின் தலைமையகமாக இருந்துள்ளது. ஆகவே, இந்த நகரத்தைப் பற்றிய வரலாறு இன்னும் எழுத எழுத வந்து நீண்டு கொண்டே இருக்கின்றது.

இந்தியாவின் முழு வரலாறு ஒளிந்துள்ள மிகமிக முக்கியமான ஒரு இடம் சென்னையில்தான் உள்ளது. அதற்குப் பெயர் தமிழ்நாடு ஆவணக்காப்பகம். அதற்கு முன்னால் சென்னை ஆவணக்காப்பகம். ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ் என்று பெயர். எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பாக 1906இல் இருந்து இன்றுவரை உருமாறாமல் அந்தக் கால தோற்றத்தில் அப்படியே காட்சி தரும் இந்தக் கட்டடத்தைப் பலரும் கடந்து போய் இருக்கக் கூடும். அதன் சிறப்பு என்ன என்பதைப் பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
இந்த ஆவணக்காப்பகத்தின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் அ.வெண்ணிலா சில வரலாற்றுச் செய்திகளைக் கூறியுள்ளார். இவர் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக் பற்றிய ஆவணங்களை எல்லாம் இங்கே இருந்து எடுத்து 'நீரதிகாரம்' என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த அணை 1893 இல் கட்டப்பட்டது. 130 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை அவர் இங்கே இருந்துதான் திரட்டியுள்ளார். மேலும் லண்டனிலிருந்த ஆவணங்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளார்.
அ.வெண்ணிலா ஆவணக்காப்பகம் பற்றிய வரலாற்றைப் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள ஆவணக்காப்பகத்தின் முதல் ஆவணக்காப்பக இந்திய அதிகாரி பி.எஸ்.பாலிகா தான். அதற்கு முன்னதாக பல பிரிட்டிஷ் அதிகாரிகள் இருந்துள்ளனர். முதல் இந்தியர் இவர்தான். இவர் தெற்கு கர்நாடகாவில் பிறந்தவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். அதன்பின்னர் லண்டன் போய் படித்தார். படிப்பு முடிந்ததும் உடனடியாக மெட்ராஸ் ஆவணக்காப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆண்டுகாலம் அவர் அதிகாரியாக பணியாற்றினார். அவர் காலத்தில் செய்த சாதனைக்கு ஈடு இணையே இல்லை.

பாலிகா அதிகாரியாகப் பதவியேற்ற கொஞ்சக் காலத்திலேயே இரண்டாம் உலகப்போர் வந்தது. முதல் உலகப் போரில் எம்டன் குண்டு சென்னையில் மீது வீசப்பட்டது. அதனால், இரண்டாம் உலகப் போரில் சென்னை தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று மக்கள் அஞ்சினார்கள். உயிர் பயம் இருந்தது. பலரும் உயிருக்கும் பயந்து கொண்டிருந்தபோது, மெட்ராஸ் ஆவணக்காப்பகத்திலிருந்த ஆவணங்களைக் காப்பாற்ற வேண்டும் என கடும் முயற்சியை எடுத்தவர் பாலிகா. அவர் இல்லை என்றால் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் ஆட்சிக்கால ஆவணங்கள் அழிந்துபோய் இருக்கக்கூடும்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் வான்வழித் தாக்குதல்தான் அதிகம் இருந்தது. அதை உணர்ந்த பாலிகா ஆவணக்காப்பகத்தின் சுவர்களை எல்லாம் வலிமையாக மாற்றிக் கட்டினார். உடனடியாக தப்பிப் போகும் அளவுக்கு ஜன்னல்களை எல்லாம் பெரிய கதவுகளாக மாற்றினார். வேலை செய்த ஊழியர்களுக்குத் தாக்குதல் ஏற்பட்டால் எப்படித் தப்பிப் போக வேண்டும் என்று ராணுவ பயிற்சி அளித்தார். கூடவே ஆவணங்களை எப்படிப் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கை எல்லாம் 1937 தொடங்கி 1941 வரை செய்துள்ளார். அதற்குப் பின் 1942இல் போர் ஏற்படும் என்ற நிலை வரும்போது, சென்னையிலிருந்த ஆவணங்களை முழுதாக 125 கிமீட்டர் தள்ளி உள்ள சித்தூர்க்கு எடுத்துக் கொண்டு போகிறார். இந்த ஆவணங்களை அவர் மாட்டு வண்டியில் கொண்டு போனாரா? அல்லது ரயிலில் கொண்டு போனாரா? என்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.
அவர் சித்தூர்க்கு ஒரிஜினல் ஆவணங்களைக் கொண்டு போனார். அதன் நகல்களை அவர் சென்னையிலேயே வைத்துவிட்டார். ஒருவேளை அரசு அதிகாரிகள் தலைமைச் செயலகத்திலிருந்து ஆவணங்களைக் கேட்டால், சித்தூரிலிருந்து கொண்டுவந்து கொடுப்பது தாமதமாகும். எனவே இந்த ஏற்பாட்டை அவர் புத்திசாலித்தனமாகச் செய்துள்ளார்.

ஆவணங்களை இடம் மாற்ற முதலில் அஞ்சல் அலுவலகத்தின் உதவியைக் கேட்கிறார் பாலிகா. அவர்கள் இவ்வளவு பெரிய பார்சல்களை கொண்டு போக முடியாது என நழுவிவிட்டனர். அடுத்து ரயில் மூலம் பார்சலில் போடுகிறார். அதனால் ஏகப்பட்ட செலவு அதிகமாகிறது. எனவே அரசுக்குத் தேவையான ஆவணங்களைத் தலைமைச் செயலகத்திற்குக் கொண்டுவர 2 பியூன்களை வேலைக்கு அமர்த்துகிறார். அவர்களுக்கு 12 ரூபாய் மாதச் சம்பளம். இவர்கள் தினம் சித்தூரிலிருந்து ரயிலில் அரசுக்குத் தேவையான டாக்குமெண்டுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பார்த்து முடித்ததை மீண்டு எடுத்துக் கொண்டு போய் வைத்துள்ளனர்.
இப்படி 1942 இல் தொடங்கி 1945வரை செய்துள்ளார். சித்தூர் போன ஆவணங்கள் அனைத்தும் 1950இல் தான் திரும்பச் சென்னைக்கு வந்தன. இந்தளவுக்குப் போர்க் காலத்தில் ஆவணங்களைக் காப்பாற்றிக் கொடுத்தற்காக இந்தியாவின் வைஸ்ராய் பாராட்டி பரிசு வழங்குகிறார்" என்கிறார்
சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்பாக 70 ஆயிரம் ஆவணங்கள் இங்கு உள்ளன. 70 ஆயிரம் இந்தியாவைப் பற்றியவரைப்படங்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications