ரயில் கவிழ்ப்பு சதி? நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!
சென்னை: நேற்றிரவு, ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் அருகே தண்டவாளத்தில் இருந்த இரும்பு கம்பி மீது மோதியது. நல்வாய்ப்பாக ரயில் தடம் புரளாமல் இருந்ததால், அதில் பயணித்த பயணிகளும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உயிர் தப்பினர்.
ரயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2 பேரும் பயணித்திருந்தனர். தண்டவாளத்தில் கம்பி இருந்தது, ரயிலை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதியா? என ரயில்வே போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டிலிருந்து ஜோலார்பேட்டை, அரக்கோணம் வழியாக தினமும் சென்னை சென்ட்ரலுக்கு 'ஏற்காடு எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு வழக்கம்போல 9 மணியளவில் ஈரோட்டிலிருந்து இந்த ரயில் புறப்பட்டிருக்கிறது. ரயில் சேலத்தை கடந்து வந்துக்கொண்டிருக்கையில், மகுடஞ்சாவடி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரயில் என்ஜினில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ சத்தம் வருவதை லோகோ-பைலட் உணர்ந்திருக்கிறார்.
இதனையடுத்து, ரயிலை நிறுத்தி இறங்கி சென்று சோதனை செய்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு ஒன்று சிக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. ரயிலை தொடர்ந்து இயக்க முடியாது என்பதை உணர்ந்த பைலட், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விவரமறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், இந்த என்ஜினை கொண்டு ரயிலை இயக்க முடியாது என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு, அது ரயில் பெட்டிகளுடன் பொருத்தப்பட்ட பின்னர், 3 மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டது. இதனால் இந்த மார்க்கத்தில் இயக்கப்பட்ட மற்ற ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
இவ்வளவு பெரிய இரும்பு துண்டு எப்படி தண்டவாளத்தில் வந்தது என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. எனவே ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடம் காட்டுப்பகுதி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனவே யாரையும் அடையாளம் காண முடியவில்லை. ஆனால், சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நபர்கள் யாராவது குடிபோதையில் இரும்பு துண்டை தூக்கி தண்டவாளத்தில் வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
எனவே, இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது நேற்று தண்டவாளம் பக்கத்தில் திரிந்துக்கொண்டிருந்தார்களா? என்பது குறித்து மேலும் விசாரணை தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் பயணித்த ரயில், தண்டவாளத்தில் இருந்த இரும்பு கம்பியில் மோதி நின்றிருந்த சம்பவம், ரயில்வே வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, ரயில் பயணங்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் ஏராளமான விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications