ஆபாச வீடியோக்கள்..ஆதீனத்துக்கு மிரட்டல்! பாஜக அகோரத்துக்கு அடுத்த சிக்கல்..! வெளியில் வர முடியாதா?
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தாக்கல் செய்த 2வது ஜாமின் மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதினத்தின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
தருமபுரம் ஆதீனம்: அதில் தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. தருமபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும் அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
பாஜக மாவட்ட தலைவர்: இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் முதற்கட்டமாகத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத் மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தாளாளர் குடியரசு , ஸ்ரீநிவாஸ், ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அகோரத்தின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அகோரம் கைது: மயிலாடுதுறை போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மார்ச் 15ஆம் தேதி மும்பையில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்தனர். இதனையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அகோரம் இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு தள்ளுபடி: மேலும், மனுதாரர், 45 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். எனவே, அதனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அகோரம் இன்னும் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications