அவசரமா.. அபராதம் போட்டுருவோம் பார்த்துக்கோங்க! பொங்கல் பணம் கேட்ட பாஜக வக்கீலுக்கு ஹைகோர்ட் வார்னிங்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு
ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து, நேற்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு, ரொக்கப் பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், ரொக்கப் பணம் வழங்கப்படாது எனத் தெரிவித்து விட்டது. தமிழக அரசு. எதிர்க்கட்சிகள், பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூபாய் 2000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. ஆனால், தமிழக அரசு இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கப் பணம் வழங்க முடியவில்லை என விளக்கம் அளித்தது.
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அனைத்து ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களோடு ரூபாய் 2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன் தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளதால், வரும் தமிழ் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல, தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஏற்கனவே ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
ஐகோர்ட்டில் முறையீடு
இன்று மனுதாரர் சார்பாக வழக்கறி ஜி எஸ் மணி, தலைமை வழக்கறிஞர் ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வர இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தர வேண்டும் என முறையிட்டார். ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும், வழக்கு பட்டியலிடப்படவில்லை என்று முறையிட்டார்.
எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள்
அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி ஸ்ரீராம், ஏற்கனவே நாங்கள் இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று நிராகரித்த பிறகு மீண்டும் நீங்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது என்றும். இது போன்று தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டால், மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இந்த பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று காட்டமாக தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications