கூட்டுறவு துறையில் வேலை! தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஹைகோர்ட்!
சென்னை: கூட்டுறவுத் துறையில் நேர்முகத் தேர்வு நடந்த நிலையில் அதன் முடிவுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக இருந்த 2,848 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆக.6-ஆம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் வங்கிகளுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு அக்.10-ஆம் தேதி நடைபெற்றது. அதில், தகுதி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு கடந்த ஆண்டு நவ.15-இல் நடத்தப்பட்டது. அதேபோன்று மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு அக.11-ஆம் தேதி நடைபெற்றதுடன், அதில் தகுதி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு கடந்த ஆண்டு நவ.24-இல் நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி தேர்வர்கள் போராட்டமும் நடத்தியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983-இன் பிரிவுகள் 74, 75(1) மற்றும் தமிழ்நாடு பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களின் பொதுப் பணி நிலை திறன் விதிகள், 2024 ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமா்வு கடந்த ஆண்டு ஆக.12-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் நியமன ஆணைகள் வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதி தீா்ப்பு விரைவில் கிடைக்க கூட்டுறவுத் துறை சாா்பில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே, இந்த வழக்கின் இறுதி தீா்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தோ்வுகளுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி 6 மாதங்களான நிலையில் இதுவரை அதன் முடிவுகளை அறிவிக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தருண்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டுறவுத் துறை நேர்முகத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications