“கடமையை தவறினார் டிஜிபி சைலேந்திரபாபு..” காவலருக்கான சம்பள பாக்கி விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தி
சென்னை: சம்பள பாக்கி கோரிய ஆய்வாளரின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் டிஜிபி சைலேந்திர பாபு கடமை தவறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் ரஞ்சித். இவர் பணியாற்றிய காவல் நிலையங்கள் அனைத்திலும் லஞ்சம் வாங்காமல் பணியாற்றியதாக இவரை பற்றி சொல்லப்படுகிறது. இவருடைய 20 ஆண்டுகால காவல்துறை பணியில் சுமார் 39 முறை பணி மாறுதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு இரண்டு மாத காலம் சம்பளம் வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சம்பள பாக்கி காரணமாக புற்றுநோய்க்கான மருந்துகளை வாங்குவதிலும், குழந்தைகளின் பள்ளி செலவுகளுக்கும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து வேறு வழியின்றி இந்த விவகாரத்தை டிஜிபி சைலேந்திர பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். தன்னுடைய சம்பள பாக்கி குறித்தும், அதனால் தான் படும் அவதிகள் குறித்தும் விரிவாக விண்ணப்பத்தில் எழுதி அதை டிஜிபிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல மாதங்கள் நகர்ந்திருக்கிறது. ஆயினும் நிலுவையில் இருந்த ஊதியம் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் எப்படியாவது இந்த சம்பளம் கிடைத்துவிடும், வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்று ரஞ்சித் எதிர்பார்த்துக்கொண்டிருக்க ஓராண்டு முழுமையாக கடந்திருக்கிறது. எனவே வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஒரு காவல் ஆய்வாளர், தன்னுடைய சம்பள பாக்கி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் என்கிற விவரம் அறிந்தும் கூட, நிலுவையில் இருந்த சம்பளம் விடுவிக்கப்படாமல் இருந்திருக்கிறது. மறுபுறம் இந்த வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்திருக்கிறது. இப்படியே நீதிமன்றத்தை எதிர்பார்த்தும், தனது சம்பளத்தை எதிர்பார்த்தும் ஏறத்தாழ 4 ஆண்டுகள் கடந்திருக்கிறது.
இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்று கூறினார். மேலும், நாட்டில் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி
இருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம் எனவும் அதிருப்தி தெரிவித்தார்.
அதேபோல ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள மனுதாரரின் சம்பள பாக்கியை வழங்காததும், சம்பள பாக்கியை கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காத டி.ஜி.பி.யின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்திருக்கிறார். நீதிபதியின் இந்த கருத்து தமிழக காவல்துறை வட்டாரத்தில் அதிகாரிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications