ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு.. நவாஸ் கனி எம்.பி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி நவாஸ் கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நவாஸ் கனியின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி.

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா மைக் சின்னத்தில் போட்டியிட்டார். ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும், 5 பேர் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டனர்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நவாஸ் கனி தேர்தல் வேட்பு மனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.பி நவாஸ் கனி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.பி நவாஸ் கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தேர்தல் வழக்கை அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூன் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications