Vaa Vaathiyar: நடிகர் கார்த்திக்கு சிக்கல்.. வா வாத்தியார் படத்தை வெளியிட கூடாது.. சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "வா வாத்தியார்" படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட தயாரிப்பாளர் கே ஞானவேல் ராஜா 21.76 கோடியை திருப்பி செலுத்தும் வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கார்த்தியின் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படமானது வரும் 12 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில் தான் உயர் நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வா வாத்தியார் திரைப்படம்
நடிகர் கார்த்தி போலீஸாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஆனந்த் ராஜ், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படமானது வரும் 12 ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்த நிலையில் தான், அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடம் வா வாத்தியார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனுக்காக தற்போது இந்த திரைப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக வா வாத்தியார் படத்தின் சூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது தான் ரிலீசுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ரூ.21 கோடியே 78 லட்சம்
ஞானவேல்ராஜா கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடம் ஞானவேல் ராஜா ரூ.10 கோடி கடன் வாங்கியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜூன்லால் சுந்தரதாஸ் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சிய அலுவலகத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே தான் ஞானவேல்ராஜா பெற்ற ரூ.10 கோடி தற்போது வட்டியுடன் சேர்த்து 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ஆகியிருக்கிறது என்றும், இந்த பணத்தை கொடுத்தால் தான் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் தரப்பில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.
படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது
இந்த வழக்கானது கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ் சுப்பிரமணியம், சி குமரப்பன் ஆகியோர் அமர்வு, "வா வாத்தியார் படத்தின் ரிலீசுக்கு முன்பு கணிசமான தொகையை செலுத்துவது தொடர்பாக ஞானவேல் ராஜா பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடம் இருந்து ஞானவேல்ராஜா வாங்கிய 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை திரும்பி செலுத்தாத வரை வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. ஓடிடியிலும் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டனர். இது ரசிகர்கள் மற்றும் வா வாத்தியார் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications