அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கு.. ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது அனுமதியின்றி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பரவலின் போதும் கூட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு திமுக சார்பாக விருதுநகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா பரவலின் போது திமுக தரப்பில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளாகியும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கை என்ற கோரிக்கையுடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தரப்பில் மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கில் 2 ஆண்டுகள் வரையில் மட்டுமே தண்டனை அளிக்கும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான சூழலில் 5 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விருதுநகர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏஆர்ஆர் சீனிவாசனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications