சவுக்கு சங்கரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் வாங்குங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார். என்னவெல்லாம் செய்ய மாட்டார் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி யூ டியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு ஊர்களின் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின், நாளை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். இதேபோல, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் நாளைக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் எனவும், என்னவெல்லாம் செய்ய மாட்டார் எனவும் உத்தரவாதம் அளித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என, சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார். அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதுசம்பந்தமாக அவரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என, அவர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications